Skip to main content

சுருக்குமடி வலை குறித்து உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

highcourt chennai

 

தமிழகத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அறிவழகன் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த மார்ச் 2000 ம் ஆண்டு தமிழக அரசு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டதாகவும், இதற்கிடையில் மீன்பிடித் தடைக் காலத்தை மறு ஆய்வு செய்யவும், மீன் வளத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒரு தொழில்நுட்ப குழுவை அமைத்தது. 

 

2014 ஆண்டு இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளது என 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டதாகவும், ஆனால் தமிழகத்தில் இந்த உத்தரவை பின்பற்றாததால் தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என 2021ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி தமிழக அரசுக்கு  மனு அளித்ததாகவும் அந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

 

இந்த மனு, நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அனுப்பிய பதில் கடிதத்தில், சுருக்குமடி வலையைக் கொண்டு மீன்பிடித் தொழில் செய்வது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் என தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

சில நாட்களாக மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் சுருக்கு மடி வலை தொடர்பாக மீனவ கிராமங்களில் மோதல் போக்குகள் நிகழ்ந்து துப்பாக்கிச்சூடு வரை சென்றது குறிப்பிடத்தகுந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்