Court orders MLA Jagan Moorthy must appear today Human trafficking case

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர். இன்ஸ்டாகிராம் மூலமாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் சில தினங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பெண்ணின் தந்தை வனராஜா மற்றும் அவரது சகாக்கள், தனுஷின் வீட்டிற்கு சென்றுவீட்டில் இருந்து தனுஷின் 17 வயது தம்பியை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், சிறுவனை கடத்திச் சென்றுள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி, இந்த விவகாரம் குறித்து தனுஷின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

காவல்துறை தங்களை தேடுவதை அறிந்ததும் வாகனத்தில் இருந்த வனராஜா உள்ளிட்ட மூன்று பேரும், தனுஷின் தம்பியை அவரது வீட்டிலேயே கொண்டு வந்து விட்டுள்ளனர். இருப்பினும் வழக்குப்பதிவு செய்து திருவிலங்காடு போலீசார், 3 பேரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சூழ்நிலையில், இந்த வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெகன் மூர்த்தியும், ஏடிஜிபி ஜெயராமன் ஏற்கெனவே நல்ல நட்பில் இருந்ததாகவும், சம்பவம் நடந்த தினத்தன்று ஜெயராமனின் காரை கடத்தல் கும்பல் எடுத்துச் சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, ஜெகன் மூர்த்தியை கைது செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த 14ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர். அப்போது புரட்சிப் பாரதம் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 6 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஜெகன் மூர்த்தி இல்லாததால் போலீசார் அங்கிருந்து திரும்பிச் சென்றிருந்தனர். இதற்கிடையில், ஜெகன் மூர்த்தி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அவர் வெளிமாநிலங்களுக்குத்தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக தனிப்படைகள் அமைத்து மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (16-06-25) காலை நீதிபதி வேல்முருகன் முன்பு வந்தது. அப்போது, ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியுள்ளார் என்றும், இந்த வழக்கில் ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கூறியதாவது, ‘ஜெகன் மூர்த்தி இன்று (16-06-25) மதியம் 2:30 மணிக்கு ஆஜராக வேண்டும். ஆள் கடத்தலுக்கு உதவியதாகக் கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் மதியம் 2:30 மணிக்கு ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டார். மேலும் அவர், ‘ஏடிஜிபி ஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்’ என்று காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.