Skip to main content

48 மணி நேரம்தான்.. தனுஷிற்கு கெடு விதித்த நீதிமன்றம்...! 

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

The court ordered Dhanush to pay tax within 48 hours ...!

 

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி நிலுவைத்தொகை 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2018ல்  தீர்ப்பளித்த்து.

 

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி,   மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும்,  அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

 

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் என குறிப்பிடாதது ஏன் என  கேள்வி எழுப்பினார்.

 

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா என கேள்வி எழுப்பினார்.


2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டிதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

 

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.


உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள் என அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம்சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் படி நடக்கும்படி அறிவுறுத்தினார்.


நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவிற்காக  மதியம் தள்ளிவைத்தார்.


அதன்படி, வணிக வரித் துறை தரப்பில் தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது தனுஷ் தரப்பில், கரோனா காலம் என்பதால் திங்கட்கிழமைக்குள் இந்த தொகையை செலுத்திவிடுவதாக உறுதி அளிக்கப்பட்டது.


ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மின்னணு பரிவர்த்தனையிலேயே நிலுவை வரியை செலுத்தபோவதால் 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை வாபஸ் பெறும் தனுஷின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைத்தார்.


பின்னர், நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் குவிந்துள்ள நிலையில், இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான் என குறிப்பிட்டார். பின்னர், மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லை என்றால் அதை ஏற்க கூடாது என்ற உயர் நீதிமன்ற விதிகளை பின்பற்றாத பதிவுத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“முதன் முதலில் கலைஞர் என்னை பார்த்து இவ்வாறு அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது”- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
actor Dhanush says  It was a surprise when the artist called me this for the first time

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது. 

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமே இல்லை. ஒரு படத்தின் பூஜையின் போது நான் முதல் முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கே வந்திருந்த கலைஞர் என்னை பார்த்து ‘வாங்க மன்மத ராஜா’ என்று கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது. அதை பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்து விட்டார் என்று நினைவுக்கு வரும். இப்பவும் அவர் நம் கூட வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொல்லிருப்பார். ஆனால், நம்முடைய கலைஞர் 2000ல் ‘நான் என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்’ என்று சொன்னார். நாமாக வாழ்வோம் நலமாக வாழ்வோம்” என்று பேசினார்.