The court ordered Dhanush to pay tax within 48 hours ...!

Advertisment

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி நிலுவைத்தொகை 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2018ல் தீர்ப்பளித்த்து.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் என குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Advertisment

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா என கேள்வி எழுப்பினார்.

2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டிதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள் என அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம்சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் படி நடக்கும்படி அறிவுறுத்தினார்.

நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவிற்காக மதியம் தள்ளிவைத்தார்.

அதன்படி, வணிக வரித் துறை தரப்பில் தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது தனுஷ் தரப்பில், கரோனா காலம் என்பதால் திங்கட்கிழமைக்குள் இந்த தொகையை செலுத்திவிடுவதாக உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மின்னணு பரிவர்த்தனையிலேயே நிலுவை வரியை செலுத்தபோவதால் 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை வாபஸ் பெறும் தனுஷின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைத்தார்.

பின்னர், நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் குவிந்துள்ள நிலையில், இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான் என குறிப்பிட்டார். பின்னர், மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லை என்றால் அதை ஏற்க கூடாது என்ற உயர் நீதிமன்ற விதிகளை பின்பற்றாத பதிவுத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.