Court order for peramabalur Veppandhattai chariot issue

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை என்ற பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேத மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முதல் முறையாக 1993இல் தேர்த் திருவிழா நடைபெற்றது. அதன் பிறகு இரு தரப்பினரிடையே பெரும் பிரிவினை இருந்து வந்தது. இதன் காரணமாக 32 ஆண்டுகள் தேர்த் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இதனிடையே கடந்த வருடம் இந்த கிராமத்தில் வேத மாரியம்மனுக்கு தேர்த் திருவிழா நடைபெறும் என்று அரசின் சார்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 2 பிரிவினருக்கும் தேரில் சமூக உரிமை வழங்கப்பட்டுக் கடந்த ஆண்டு தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த வருடமும் அதே போன்று திருவிழா நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. இத்தகைய சூழலில் தான் ஒரு பிரிவினர் எங்கள் பகுதிக்கும் தேர் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதற்காகக் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே இந்த தேர்த் திருவிழாவானது இன்றைக்கு (10.06.2025) நடைபெற இருந்தது.

Advertisment

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக இன்றைக்கு நடைபெற இருந்த தேர்த் திருவிழா நடக்கக்கூடாது எனக் கூறி மற்றொரு தரப்பினரைச் சமாதானப்படுத்தி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதே சமயம் இந்த பகுதிகளில் எவ்வித கலவரங்களும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகக் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தேர் முன்பு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை அகற்ற முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்திலும் மக்கள் ஈடுபட்டனர். மற்றொரு புறம் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதற்கிடையே பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்வதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்ல முடியுமா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக குறிப்பிட்ட தெருக்கள் குறுகலானவை என்பதால் தேர் செல்வதில் சிக்கல் உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை மாதம் 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.