hh

Advertisment

வனப்பகுதிக்குள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 4 ஆம் தேதி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குள்கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கக் கோரிதொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை வனத்துறை செயல்படுத்தி இருக்கும் நிலையில் இந்த உத்தரவு நீலகிரி மாவட்டம்முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ள மசினகுடி மாயார், பொக்காபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் அமைக்கப்படுவதற்கு முன்பாகவே அப்பகுதி கிராம மக்கள் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்க்கும் வழக்கத்தைப் பெற்றுள்ளனர். மக்களிடம் இருந்து நிலத்தைப் பெற்று அதை வனப்பகுதியாக மாற்றப்பட்டபோதும்அந்த இடங்களை மேய்ச்சல் நிலங்களாக அப்பகுதி மக்கள் தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கால்நடைகள் மூலமாகவே வாழ்வாதாரம் பெற்றுவரும் அப்பகுதி மக்களின் அடிமடியில் கை வைத்துள்ளது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் மசினகுடி உள்ளிட்டகிராமமக்கள்.