Court issues Orders to Ooty, Kodaikanal hostels

ஊட்டி, கொடைக்கானலில் உரிமம் இல்லாமல் விதிகளை மீறி செயல்படும் தங்கும் விடுதிகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சட்டவிரோதமாக தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருவதாக முறையிடப்பட்டது. உரிமம் இல்லாத; விதிகளை மீறி செயல்படும் தங்கும் விடுதிகள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'ஊட்டி, கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளையும் இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் 'என உத்தரவிட்டனர்.

இதற்காக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி மற்றும் நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி என 3 பேர் கொண்டகுழுவை அமைக்க வலியுறுத்திய நீதிபதிகள், இந்த குழு தங்கும் விடுதிகளை ஆய்வுசெய்து விடுதிகள் உரிய அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளதா?:சுற்றுலாத்துறை அனுமதி பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். அப்படி உரிய அனுமதிஇல்லாவிட்டால் அந்த தங்கும் விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisment

அதேபோல் சட்டவிரோத தங்கும் விடுதிகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக தொலைப்பேசி எண் மற்றும் இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். விடுதிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தது தொடர்பான அறிக்கையை வரும் ஜூன் 20ஆம் தேதி மூன்று பேர் கொண்ட குழு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ஜூன் 20ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.