/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement-1.jpg)
அசாதாரண சூழ்நிலைகள் தவிர, தமிழக முதல்வர் ஸ்டாலினை, ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக் கூடாது என, அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. கரோனா இரண்டாவது அலை பரவத் துவங்கிய நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருவதாகக் கூறி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், முதல்வரின் உடல் நலனில் அனைவருக்கும் அக்கறை இருப்பதாகவும், தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வது என ஓய்வு இல்லாமல் உழைத்து வருவதாகவும், ஓய்வு இல்லாமல் பணியாற்றிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மயக்கமடைந்து, மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். முதல்வர் ஓய்வு எடுப்பது அவசியம் எனக் கூறியுள்ள மனுதாரர், அசாதாரண சூழ்நிலைகள் தவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்வருக்கு எந்த கோப்பையும் அனுப்புவது, அவரின் உத்தரவு கேட்பது என தொந்தரவு செய்யக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, முதல்வர், அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அபத்தமான காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்ததாக கூறி, மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை முதல்வர் கரோனா நிவாரணத்துக்காக வழங்க வேண்டும் எனவும், மனுதாரர் ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தொடர தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)