/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maduai high court.jpg)
இருவருட டிப்ளமோ உடற்கல்வி படிப்பு பயின்ற ஏழு பேரை சிறப்பு உடற்கல்வி ஆசிரியர் கவுன்சிலிங்கிற்கு கலந்துகொள்ள அனுமதியளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகரை சேர்ந்த நாகராஜ் உள்ளிட்ட ஏழு பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘’ 2006 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டு டிப்ளமோ இன் உடற்கல்வி படிப்பை முடித்தோம். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பதிவு செய்திருந்தோம். ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 ஆம் ஆண்டு 632 சிறப்பு உடற்கல்வி ஆசிரியர் பணிகளுக்காக அறிவிப்பாணை வெளியிட்டது. இதில் தேர்வெழுதி 76 மதிப்பெண்கள் பெற்றேன். பின்னர் 2018 ஆகஸ்ட் 13 ல் சான்றிதழ் சரிபார்தலுக்கு சென்றேன்.
சான்றிதழ் சரிபார்பில் ஒருவருட உயர்நிலை உடற்கல்வி படிப்பு சான்றிதழ் இல்லை என எங்களை நிராகரித்துவிட்டனர். ஆனால் தமிழக அரசு 2004 ஆம் ஆண்டே ஒருவருட உயர்நிலை உடற்கல்வி படிப்பை நிறுத்திவிட்டது. ஒருவருட படிப்பிற்கு பதிலாகத்தான் தமிழக அரசு இரண்டு வருட டிப்ளமோ உடற்கல்வி படிப்பை அறிமுகபடுத்தியது.
இதன் அடிப்படையில் தான் நாங்கள் இரண்டு வருட டிப்ளமோ உடற்கல்வி படிப்பை படித்து முடித்தோம். இந்நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் 632 சிறப்பு உடற்கல்வி ஆசிரியர் பதவிகளுக்கான தற்காலிக பெயர் பட்டியலை வெளியிட்டது. தற்காலிக பெயர் பட்டியலில் இருப்பவர்களுக்கு அடுத்ததாக கவுன்சிலிங் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தற்காலிக பெயர் பட்டியலில் எங்களின் பெயர்கள் இல்லை. மேலும் 100 க்கு 61 மதிப்பெண்கள் பெற்றவர்களின் பெயர்கள் இருந்தது. ஆனால் 81 மதிப்பெண்கள் பெற்ற எங்களின் பெயர்கள் இல்லை.மேலும் எங்களை கவுன்சிலிங்கிற்கும் அழைக்கவில்லை.
எனவே இருவருட டிப்ளமோ உடற்கல்வி படிப்பை முடித்த எங்களையும் சிறப்பு உடற்கல்வி ஆசிரியர் கவுன்சிலிங்கிற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவருட டிப்ளமோ உடற்கல்வி படிப்பு பயின்ற ஏழு பேரையும் சிறப்பு உடற்கல்வி ஆசிரியர் கவுன்சிலிங்கிற்கு கலந்துகொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டு வழக்கினை முடித்துவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)