Skip to main content

சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய வழக்கு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு இறுதி அவகாசம்!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019


நெடுஞ்சாலை பராமரிப்பு தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு இறுதி அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

​​​​Turnpike



சென்னை தாம்பரம் - திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் உரிமக் காலம் முடிந்துவிட்டதால், சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த ஜோசப் சகாயராஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் பராமரிப்பு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு,  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர்,  பதில் மனு தயாராக இருப்பதாகவும், அதில் கையெழுத்திடும் அதிகாரி டெல்லி சென்றுள்ளதால் அதைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வேண்டுமென்றும் கோரினார். 

 

court



அப்போது சாலை விரிவாக்கப் பணிகளின்போது வெட்டப்படும் ஒவ்வொரு பழமையான மரத்திற்கு ஈடாக, 10 மரக்கன்றுகளை நடவேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவு  முழுமையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.  மேலும், சுங்கச்சாவடிகளில் போதிய சுகாதார வசதி, ஆம்புலன்ஸ்  வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என மற்றொரு இணைப்பு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் செய்யும் விதிமீறல்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தட்டிக்கேட்காமல், கண்ணை மூடிக்கொண்டுள்ளதால், சுங்கக்கட்டணத்தை வசூலிக்கத் தடைவிதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதையடுத்து,  நெடுஞ்சாலை பராமரிப்பு, விரிவாக்கம், மரங்கள் நடப்பட்டது குறித்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு இறுதி அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 16-ஆ ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.