/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement-01_4.jpg)
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் என 2019ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனியாக உதயமானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாவட்டத்திற்கு என ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு 2020 ஆண்டு நவம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதோடு இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி நகரிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ளது வீரசோழபுரம் என்ற கிராமம். இங்குள்ள அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்குச்சொந்தமான நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதை அறிந்த சிவனடியார்கள் கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டக்கூடாது என்றனர். மேலும் சந்தை மதிப்பில் மேற்படி கோயில் நிலவிலை அதிகம், ஆனால் அரசோ குறைந்த குத்தகை அடிப்படையில் கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட உத்தரவிட்டது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இதையடுத்து உயர் நீதிமன்றம் வழக்கு முடியும் வரை அலுவலகக் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிலத்தை அரசு குத்தகைக்கு எடுப்பது சம்பந்தமாக மதிப்பீடுகளை மாவட்ட நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இந்தக் குழு அளித்த அறிக்கைக்கும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட மதிப்புக்கும் இடையே பெரிய அளவில் குத்தகைத் தொகை சம்பந்தமான வேறுபாடு இருந்துள்ளது. அதனால் பாரத ஸ்டேட் வங்கி மதிப்பீட்டாளர்கள் மூவரின் பெயரை மதிப்பீடு செய்வதற்கு பரிந்துரைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வங்கி தரப்பில் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன அதில் ஒருவரை மதிப்பீட்டாளாராக நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதிப்பீட்டாளர் ஆய்வு மேற்கொள்ளும்போது மனுதாரர் மற்றும் அரசு பிரதிநிதி உடனிருக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வாடகை தொகை நிர்ணயம் தொடர்பான பிரச்சினை மட்டுமே இருப்பதனால் கட்டுமானப் பணிக்கான தடையை நீக்கும்படி அரசின் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண் கோரினார். இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டெண்டர் நடைமுறை சுற்றுச்சூழல் அனுமதி குறித்து மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதைப் பதிவு செய்த முதல் பெஞ்ச் உரிய துறைகளில் ஒப்புதல் அனுமதி பெற்று கட்டிடப் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்துள்ளது உயர் நீதிமன்றம். பின்னர் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்தில் ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம். இதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் மதிப்பீட்டாளர்கள் குழு ஆய்வு செய்து பரிந்துரைக்கும் குத்தகை நிர்ணயத்தை நீதிமன்றம் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கும் நிலை உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே அதற்காகக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கத் தேவையில்லை பணிகளை தொடரலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)