/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1411.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், மணலூரைச் சேர்ந்தவர் அன்பழகன் (57). இவரது மனைவி ராஜேஸ்வரி (49). இவர்களின் மகன் பிரபு (25). இவர் 24 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண் கருத்தரித்துள்ளார். அப்போது வேலை இல்லாமல் இருந்ததால் வேலை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும், கருவைக் கலைக்குமாறும் பிரபு கூறியுள்ளார். அதன்படி அந்தப் பெண் கருவைக் கலைத்துள்ளார்.
அதன் பின்னர், பிரபுவுக்கு நீதிமன்றத்தில் வேலை கிடைத்துள்ளது. அதனால் அப்பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு பிரபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் பிரபு, திருமணம் செய்ய மறுத்ததுடன் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு அப்பெண் விஷ விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், நல்வாய்ப்பாக அவர் மீட்கப்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் குணமடைந்தார். அப்போது, பெண்ணைக் காதலித்து கருவுறச்செய்து, தற்கொலைக்குத் தூண்டியதாக பிரபு மீது பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானித்தனர். ஆனால், பிரபு மீது அப்போது வழக்குப் பதிவுசெய்தால் அரசு வேலைக்கு ஏதாவது ஆபத்து நேரிடும் எனவும் மூன்று மாதத்திற்குப் பிறகு திருமணம் செய்துவைப்பதாகவும், எனவே புகார் செய்ய வேண்டாம் என்றும் பிரபுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அதனை நம்பிய அந்தப் பெண் வீட்டார் புகார் அளிக்கவில்லை. அதன்பிறகு பிரபு வீட்டார் தெரிவித்ததுபோல் சில மாதங்கள் கழித்துஅப்பெண் வீட்டார், பிரபு வீட்டிற்குச் சென்று திருமணம் குறித்துப் பேசியுள்ளனர். அப்போது பிரபுவின் பெற்றோர், அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 10.11.2017 அன்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து பிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அரசு வழக்கறிஞர் செல்வபிரியா வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், காதலித்து ஏமாற்றி, கருவைக் கலைத்த நீதிமன்ற ஊழியர் பிரபுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பிரபுவின் பெற்றோர் அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)