/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3617.jpg)
சேலத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரின் ஜாமினை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்குசி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சேலம் கோட்டையில் வசித்து வந்தவர் ஆசிக் (26). தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கோட்டையில் தங்கியிருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தார். இவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும், அந்த அமைப்புக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட வாலிபரை சேலம் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிக்கை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஜாமின் கேட்டு ஆசிக் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆசிக்கிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அலைபேசியை ஆய்வு செய்வதற்காக திருவனந்தபுரத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். ஆனால், 90 நாள்களுக்கு மேலாகியும் அங்கிருந்து அறிக்கை முடிவு வந்து சேரவில்லை. இதனால் சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் போனது. இதன் அடிப்படையில் ஆசிக்கிற்கு ஜாமின் கிடைத்தது.
இந்நிலையில் ஆசிக்கிற்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறையினர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ஆசிக்கின் ஜாமின் உத்தரவை ரத்து செய்ததோடு, அவராகவே நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இன்னும் ஆசிக் நீதிமன்றத்தில் சரணடையவில்லை. இதற்கிடையேஎன்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட தனிப்படையினர் தலைமறைவாகிவிட்ட ஆசிக்கை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நகர காவல்நிலையத்தில் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஆய்வாளர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)