Court custody of Minister Senthil Balaji extended again

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அவர்,அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

Advertisment

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் 28 ஆம் தேதியுடன் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளியில் ஆஜரானார். இதையடுத்து நீதிபதி செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் கடந்த 12 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இரண்டாவது முறையாக 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து ஜூலை 26 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருப்பார் எனச் சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிமன்றக் காவலை 3வது முறையாக 14 நாட்களுக்கு நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்துச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.