Skip to main content

“அரசு பிறப்பித்த தடை உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது”- வழக்கை முடித்துவைத்த நீதிபதிகள்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

"Court cannot interfere in the restraining order issued by the government" - Judges who closed the case

 

பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னையைச் சேர்ந்த  இல. கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், கடந்த 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று (08.09.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்சம் ஐந்து பேராவது ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத உரிமைகளைப் பின்பற்ற வாழ்வாதார உரிமை முக்கியமானது என்றும், பொதுநலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்