
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (23). கட்டிடத் தொழிலாளி. இண்டிப்பாளையம், சின்ன கரடு பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி(19) என்பவரை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவன் - மனைவி இருவரும் புதுகொத்துகாட்டில் குடியிருந்து வந்தனர். நேற்று இரவு சக்திவேல் தனது மனைவி பிரியதர்ஷினி உடன் அரசூர் குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இண்டி பாளையம், சின்ன கரடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் - மனைவிக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தூங்கு சென்று விட்ட நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சின்ன கரடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் சக்திவேல் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி இருவரும் பிணமாக மிதந்துள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சக்திவேல், பிரியதர்ஷினி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன் மனைவி இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது பிரியதர்ஷினி கிணற்றில் குதித்ததை பார்த்து அவரை காப்பாற்ற சென்ற சக்திவேலும் கிணற்றில் குதித்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.