Couple passes away in accident .. Driver arrested and interrogated ..

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவரது மனைவி சரஸ்வதி (46). கணவன், மனைவி இருவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான தலைவாசல் காய்கறி சந்தைக்குச் சென்று, காய்கறிகளை வாங்கி வந்து, கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்வது வழக்கம்.

Advertisment

இவர்கள் தங்களுக்கு சொந்தமான ஆட்டோவில் விளம்பாவூரிலிருந்து நேற்று (06.09.2021) காலை 6 மணிக்கு காய்கறி வாங்குவதற்காக தலைவாசல் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஆட்டோவை பெரியசாமி ஓட்டிச் சென்றுள்ளார். அந்த ஆட்டோ சின்னசேலம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரில் கரூரிலிருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

Advertisment

இதில், பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மனைவி சரஸ்வதியை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சரஸ்வதியும் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று போக்குவரத்தை சரி செய்தனர். பெரியசாமியின் மகன் அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, லாரி டிரைவர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.