Skip to main content

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த தம்பதி... பதறிய மகன் மற்றும் உறவினர்கள்!! 

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

The couple lying in a decapitated position; shocked son and relatives

 

பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது அல்லி நகரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயது பெரியசாமி மற்றும் அவரது 48 வயது மனைவி. இவர்களது மகன் மருத்துவம் படித்துவிட்டு, பணியின் காரணமாக சென்னையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். பெரியசாமியும், அவரது மனைவி ஆகிய இருவர் மட்டும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு அல்லி நகரத்திலேயே வசித்துவந்துள்ளனர். இவர்களது மகன் முருகானந்தம் சென்னையில் இருந்தாலும், தினசரி காலை மாலை தனது பெற்றோருடன் செல்ஃபோன் மூலம் பேசி விசாரித்துவருவது வழக்கம்.

 

அதன்படி நேற்று (08.06.2021) காலை சென்னையிலிருந்து முருகானந்தம் தாய், தந்தையுடன் பேசுவதற்காக செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார். ஃபோனை எடுத்து யாரும் பேசவில்லை. மீண்டும் ஒருமுறை தொடர்புகொண்டும் அவர்கள் ஃபோனை எடுத்துப் பேசவில்லை. நீண்டநேரம் முயற்சி செய்தும் தாய், தந்தை இருவரும் பேசாததால் அதிர்ச்சியடைந்த முருகானந்தம், அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஃபோன் செய்துள்ளார். தனது தாய், தந்தை இருவருமே பலமுறை ஃபோன் செய்தும் செல்ஃபோனை எடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே உடனடியாக எங்கள் வீட்டிற்குச் சென்று பார்த்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவரது உறவினர் அவரது தாய், தந்தை வசித்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த வீட்டில் பெரியசாமியும் அவரது மனைவியும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். பதறிப்போன அவர்களது உறவினர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்குத் தகவல் சொல்லியதோடு, உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த கணவன், மனைவி இருவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கணவன், மனைவி இருவரையும் கழுத்தறுத்து கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, நகை மற்றும் பணத்திற்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு கணவன், மனைவி இருவரும் இரவு நேரத்தில் வீட்டில் கொலை செய்யப்பட்டது குறித்து வேறு ஏதேனும் காரணம் உண்டா, கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்காக கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் குற்றவாளிகள் யார் என்று இதுவரை தெரியவில்லை. மாவட்டக் காவல்துறை அதிகாரி, தனிப்படை அமைத்து கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

துப்பாக்கிச்சூடு சம்பவம்; பாஜக எம்எல்ஏ கைது!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
maharashtra ulhasnagar police station bjp mla issue

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்கு உட்பட்ட உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட், சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகாரளிக்க வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மகேஷ் கெய்க்வாட்டை, பாஜக எம்.எல்.ஏ. கணபத் கெயிக்வாட் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேஷ் கெய்க்வாட் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகேஷ் கெய்க்வாட்டின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாஜக எம்எல்ஏ ஒருவர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கன்பத் கெய்க்வாட் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தானே மாவட்ட போலீஸ் டி.சி.பி. சுதாகர் பதரே கூறுகையில், “ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மூவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐபிசி மற்றும் ஆயுதச் சட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர்  பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.