Couple intimidates DMK MLA! Planned arrest by police!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எஸ்.சந்திரன். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், “நான் தலைமைசெயலகத்தில் இருந்து உள்துறை டி.எஸ்.பி. பேசுகிறேன். உங்கள் தொகுதி சம்பந்தமாக ஒரு புகார் வந்துள்ளது. அதை சரிசெய்ய ரூ.25 லட்சம் தரவேண்டும். அதனை எப்போது எங்கு தர வேண்டும் என்பதை பிறகு சொல்கிறேன்” என அழைப்பை துண்டித்துள்ளனர்.

Advertisment

அதன் பின் மீண்டும் எம்.எல்.ஏ. சந்திரனை தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர்கள், திருத்தணியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே கருப்பு நிற காரில் வருவதாகவும், அங்கு வந்து பணத்தை தரும்படியும் கூறியுள்ளனர்.

Advertisment

இது குறித்து திருத்தணி போலீஸாரிடம் எம்.எல்.ஏ. சந்திரன், புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருத்தணி போலீஸார், ஒரு பையில் கீழ் பகுதியை வெள்ளை காகிதத்தாலும், மேலே கொஞ்சம் பணம் வைத்தும் ஏற்பாடு செய்யச் சொல்லி, அதனை அவரின் உதவியாளர் மூலம் கொண்டு சென்று அவர்களிடம் கொடுக்கும்படியோசனை கூறினர். அதனை ஏற்று எம்.எல்.ஏ. சந்திரனும் அதேபோல் செய்தார்.

அவர்கள் திட்டமிட்டபடி தனியார் ஓட்டல் அருகே அந்த கார் வந்தது. அப்போது அந்தப் பையை எம்.எல்.ஏ.வின் உதவியாளர் கொண்டு சென்று கொடுத்தார். முன்னதாக அங்கு மறைவாக இருந்த காவல்துறையினர் அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.

அதன்பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (43), அவருடைய மனைவி யசோதா (43) என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் திருத்தணி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து போலியான அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், 2 செல்போன்கள், கார் மற்றும் ரூ.10 ஆயிரத்தையும் கைப்பற்றினர். கைதான இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.