Skip to main content

கள்ளக் கூட்டணியா? - ராமதாஸ் மீது துரைமுருகன் ஆவேசம்

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
durai

 

முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பது போல் மறைக்க முயற்சித்து, தி.மு.க. ஏதோ பாட்டாளி மக்கள் கட்சியை வஞ்சித்து விட்டது போலவும் - திமுக தலைவர் கலைஞர் ஏதோ தமிழ்நாட்டைக் கெடுத்து விட்டார் என்பது போலவும் டாக்டர் ராமதாஸ்  அளித்துள்ள பேட்டியை, எந்த ஒரு தி.மு.க. தொண்டனும் மட்டும் அல்ல – பா.ம.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்.  இது குறித்த அவரது விரிவான அறிக்கை:
 

பாட்டாளி மக்கள் கட்சியின் முப்பதாவது ஆண்டு விழாவையொட்டி,  நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க.வும் அதிமுகவும் தங்களுக்குள் கள்ளக் கூட்டணியை உருவாக்கி எங்களைத் தோற்கடித்தார்கள்” என்று மனசாட்சியை வங்காள விரிகுடா கடலில் தூக்கியெறிந்து விட்டு டாக்டர் ராமதாஸ்  கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் இருந்த  நேரங்களில் எல்லாம் சட்டமன்றத்  தொகுதிகளிலும், மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, தனது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவைப் பதவியையும்  வாங்கிக் கொண்டு, தலைவர் கலைஞரின் ஆதரவில் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராகவும் பதவியேற்றதை எல்லாம் வசதியாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு , தி.மு.க.வின் மீது வஞ்சக எண்ணத்துடன் நச்சுக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பதற்குக்  கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

“பெரியார் அண்ணாவிற்குப்  பிறகு உள்ள திராவிடக் கட்சிகள் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறியிருக்கும் டாக்டர் ராமதாஸ், 1999, 2004 ஆகிய நாடாளுமன்றத்  தேர்தல்களிலும், 2006, 2011 ஆகிய சட்டமன்றத்  தேர்தல்களிலும் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்த போது, “திராவிடக் கட்சி மீது உடன்பாடு இல்லாமல்தான் கூட்டணி” வைத்தாரா? அப்படியென்றால் அந்தத் தேர்தல்களில் பா.ம.க.விற்கும் செல்வாக்குள்ளதாகக் கருதப்படும் தொகுதிகளில் தி.மு.க. தோற்றதே, அதற்கு அதிமுகவுடன் அவர் வைத்துக் கொண்ட “கள்ளக் கூட்டணி”தான் காரணமா?.  ஊழலை ஒழிக்க முதன் முதலில் தமிழ்நாட்டில் சட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் என்பதையும்,மதுவிலக்கை அமல்படுத்துவதில் அக்கறை எடுத்துக் கொண்டு, மது பானக்கடைகளின் எண்ணிக்கையையும் குறைத்து, விற்பனை நேரத்தையும் அதிரடியாகக் குறைத்தவர் தலைவர் கலைஞர் என்பதையெல்லாம் மறந்து விட்டு, நெஞ்சத்தில் நஞ்சுடன் “தமிழ்நாடு ஊழல் மாநிலமாக, குடிபோதை மாநிலமாக மாறக் காரணம்” என்று சந்தர்ப்பவாத அரசியலுக்காக, அபாண்டமாகப் பழி சுமத்தியுள்ள டாக்டர் ராமதாஸ் அவர்கள்,அரசே சாராயத்தை விற்கும் என்று ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்த அதிமுக அரசைக் குறை கூறி வாய்திறக்கத் தயங்குவது ஏன்?  

 

இது எந்த மாதிரியான  கள்ள உறவு? அல்லது எதிர்காலக் கள்ள உறவுக்கு அடிக்கல் நாட்டுகிறாரா? ஊழல் புகாரில் சிக்குண்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் தனயனை மடியில் வைத்துக்கொண்டு, டாக்டர் அவர்கள் ஊழலைப்பற்றி ஓங்கிப் பேசுவதுதான் நகைமுரண். மாறிவரும் அரசியல் தட்பவெப்ப நிலைமைகளுக்கேற்ப,தி.மு.க.வில் தொடங்கி அதிமுக பா.ஜ.க. வரை அனைத்துக் கட்சிகளுடனும் இந்த 30 வருட காலத்தில்  அவ்வப்போது கூட்டணி வைத்து அபரிமிதப் பயனடைந்ததில் அழியாத சரித்திரம் படைத்த டாக்டர் ராமதாஸ் அவர்கள்,இப்படி நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து தடம்புரளாமல் இலட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், அதனை 94 வயதிலும் வழி நடத்திச் செல்லும் தலைவர் கலைஞர் மீதும், கடந்த காலத்தை மறந்து,போகிற போக்கில்  புழுதி வாரித் தூற்றுவதற்குக் காரணம், கழகத்தின் வளர்ச்சியையும், தலைவர் கலைஞருக்கு இருக்கும் மாறாப் புகழையும் பொறுத்துக் கொள்ள முடியாத பொறாமை மனம்தான் என்பது,தி.மு.க. தொண்டர்களின் உழைப்பில் வெற்றி கண்டு, பதவி சுகத்தையும் அனுபவித்த பாட்டாளி மக்கள் கட்சித்  தலைவரின் பேட்டியில் எதிரொலிக்கிறது.

 

பாட்டாளி மக்கள் கட்சி 30 ஆண்டு காணலாம். ஆனால் வன்னியப்  பெருமக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து,அவர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை அளித்த தலைவர் கலைஞர் அவர்களால்தான் இன்றைக்கு சமூக நீதிக்காக உழைத்தோம் என்று பேசும் வாய்ப்பு டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. மத்திய அமைச்சராக அதைச் சாதித்தோம்  இதைச் சாதித்தோம் என்று பேசும் வாய்ப்பும் தி.மு.க. அளித்த ஆதரவில்  அன்புமணி ராமதாஸ்  ராஜ்ய சபை உறுப்பினர் ஆனதால்தான் கிடைத்திருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கும் மிகப்பிற்படுத்தப் பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் குறிப்பிடத்தக்க அளவு கிடைக்கும் அங்கீகாரத்திற்குக் காரணமாக இருப்பவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை அவருடைய வாழ்நாள் எதிரிகளாலும் மறைத்துவிட முடியாது. இதையெல்லாம் முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பது போல் மறைக்க முயற்சித்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ பாட்டாளி மக்கள் கட்சியை வஞ்சித்து விட்டது போலவும், தலைவர் கலைஞர் ஏதோ தமிழ்நாட்டைக் கெடுத்து விட்டார் என்பது போலவும் டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, எந்த ஒரு திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனும் மட்டும் அல்ல - பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெரியவர் மோடி... சீதைக்கு சித்தப்பா...” - தன் ஸ்டைலில் விளாசிய அமைச்சர்  துரைமுருகன்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Duraimurugan speech on Candidate intro meeting in vellore

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுகக் கூட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “யாராக இருந்தாலும் அண்ணா பேரை சொன்னால் தான் தமிழகத்தை ஆள முடியும்.

தி.மு.க.வை நசுக்கிடுவோம் என மோடி பேசுகிறார், நாங்கள் என்ன மகாபலிபுரம பாறையா நசுக்க. நாங்க படா படா ஆள் இல்லை சார், சோட்டா சோட்டா ஆளுங்க எங்கள ஒன்னும் பண்ண முடியாது. ராஜகோபால ஆச்சாரியர் எங்களை மூட்டை பூச்சி போல் நசுக்குவேன் என்றார் அவரையே நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம்.

லால்பகதூர் சாஸ்திரி, தனிநாடு கேட்டால் கட்சியை தடை செய்வேன் என்றார். அதை சாமர்த்தியமாக முறியடித்தவர் அண்ணா. அண்ணாவை மட்டும் கலைஞர் சந்திக்காமல் இருந்திருந்தால் கலைஞர் கம்யூனிஸ்ட் வாதியாகி இருந்திருப்பார். அவர் ஒரு சமூகநீதிக்காரர். இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் சங்கத்திலிருந்து அப்போது கல்லூரி சார்பில் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தார்கள். நான் இதனை உடனடியாக கலைஞரிடம் போய் சொன்னேன். அதற்கு கலைஞர், ‘எம்.ஜி.ஆர். திரையில் ஆற்றிய தொண்டுக்கு டாக்டர் பட்டத்திற்கு மிக பொருத்தமானவர். நீயே அதை முன்மொழிந்து செய்ய வேண்டும்’ என சொன்னார். இதை அப்படியே எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, ‘தலைவரா அப்படி சொன்னார்’ என மிக உருக்கமாக பேசினார் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்பதை தடுத்து வழங்கச் செய்தவர் கலைஞர்.

தி.மு.க.வை பார்த்து நசுக்கி விடுவேன் உடைத்து விடுவேன் என பேசுகிறார் பெரியவர் மோடி. தி.மு.க.காரன் வெளியில் வரும்போது வாயில் வாய்க்கரிசியைப் போட்டுக் கொண்டு வருபவன். எதற்கும் துணிந்தவன். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் ஏன் சொன்னதையே திரும்ப திரும்ப மேடைகளில் சொல்கிறோம் என்றால். திரும்பத் திரும்ப சொல்லவில்லை என்றால் சீதைக்கு சித்தப்பா ராவணன் என்று விடுவார்கள்” எனப்  பேசினார்.

Next Story

“கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்”  - அமைச்சர் துரைமுருகன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
“We know how to get water from Karnataka”  - Minister Duraimurugan
கோப்புப் படம் 

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே 3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்க்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “ஒரு பெட்ரோல் பங்கை திறப்பதற்கு கூட இவ்வளவு பெரிய விழாவா என நான் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு அரசாங்க பெட்ரோல் பங்க் மக்களுக்கு தரத்துடன் பெட்ரோலை வழங்குவது இதனுடைய நோக்கம். அப்படியானால் தரத்தோடு வழங்காதவர்கள் உண்டா என்றால் உண்டு. பல பேர் கொஞ்சம் பெட்ரோலை போட்டுவிட்டு மண்ணெண்ணெய் கலந்து விடுவார்கள். அப்படிப்பட்ட பங்குகளும் உண்டு நேர்மை இல்லாத பங்குகளும் உண்டு. பெட்ரோல் போடும்போது மீட்டர் சரியாக உள்ளதா என கண்ணில் பார்த்து போட்டுக்கொள்ள வேண்டும் அது நமது கடமை. தரமானதாகவும், நேர்மையானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு  திருப்தி ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இந்தப் பெட்ரோல் பங்க் செயல்பட வேண்டும் என எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘மத்திய அரசு சொன்னாலும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளாரே’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு  தண்ணீர் திறந்து விடுவோம் என்று கேள்விப்பட்டது உண்டா. எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணியை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால், இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் திமுக  வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும். ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறித்து கேட்டதற்கு, அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்” என பதிலளித்தார்.