
கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 66 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று, ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நல்லூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜாமேரி முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திமுக, அதிமுக மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது தீர்மானத்தை எழுதி அதை ஒரு மனதாக நிறைவேற்றுவதாக ஒன்றிய அலுவலர் படிக்க முயன்றபோது, அதை தடுத்து நிறுத்திய குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை ஒன்றிய கூட்டத்தில் விவாதம் நடத்தி அதன்பிறகு நிறைவேற்ற வேண்டுமென கூறியுள்ளனர். இதனையடுத்து தீர்மானத்தை விவாதத்திற்கு வைத்தனர். அப்போது திமுக மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் மத்தியில் விவாதம் நடந்தது.
அப்போது, ‘ஒன்றிய பொதுநிதி கடந்த இரண்டு வருடங்களாக 3 கோடி 33லட்சம் ரூபாய் கணக்கில் இருந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிதியிலிருந்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஏன் நிதியை பிரித்துக் கொடுக்கவில்லை. அதைப் பிரித்துக் கொடுத்திருந்தால் எங்கள் பகுதிக்கு மக்கள் நலத் திட்டப் பணிகளை நிறைவேற்றி இருக்க முடியும்’ என்று கூறியுள்ளனர்.
அதற்குப் பதில் அளித்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறினார். அதை ஏற்க மறுத்த திமுக மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் ஒவ்வொரு ஒன்றியக்குழு உறுப்பினருக்கும் 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அலுவலர்கள் ஏற்க மறுத்ததால் ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.