Cotton and yarn prices go up .... Textile shops closed in Erode

மத்திய பா.ஜ.க. அரசு கார்பரேட் கம்பெனிகள், பெரு முதலாளிகளை வாழ வைக்கவும், நடுத்தர, சிறு, குறு தொழில் புரிவோரை அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையான மக்கள் விரோத செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருவதைக் கண்டித்தும் வரலாறு காணாத வகையில் விலை ஏறியுள்ள நூல் விலையை குறைக்கக் கோரியும் ஜவுளி தொழிலில் ஈடுபடும் உழைக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டியும் மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

Advertisment

ஈரோடு மாவட்டத்தில் மே 16 மற்றும் மே 17- ஆம் தேதி என இரண்டாவது நாளாக ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். பஞ்சு ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். நூல் விலை உயர்வை உடனே குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி, விற்பனை மற்றும் ஜவுளி சார்ந்த தொழிற்கூடங்கள் மே 16- ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

Advertisment

Cotton and yarn prices go up .... Textile shops closed in Erode

ஈரோடு மாவட்டம் முழுவதும் 25 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் ஜவுளி மற்றும் சார்பு நிறுவனங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் அளவில் உற்பத்தி மற்றும் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இரண்டாவது நாளும் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.

ஸ்டிரைக் காரணமாக பன்னீர்செல்வம் பார்க்கில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறும் ஜவுளி சந்தை மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல ஈரோட்டில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஈஸ்வரன்கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, டிவிஎஸ் வீதி, காமராஜ் வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. சென்னிமலை மற்றும் அந்தியூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்கள் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் குறைக்க ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலை உயர்வு தொடரும் பட்சத்தில் விரைவில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறினார்.

நூல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக நூல் உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்கக்கோரியும், ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொது தொழிலாளர் சங்கம், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவுத்தொழிலாளர் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பேருந்து நிலையம் முன்பாக மே 17 - ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டார தலைவர் ஆறுமுகம், கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் வட்டார செயலாளர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது.