/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai32222_0.jpg)
மதுரை மாநகராட்சியில் போலி ஆவணங்கள் தயாரித்து மருந்துகள் கொள்முதல் செய்ததாக சேலம் மாநகர் நல அலுவலர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாநகராட்சியில் மாநகர் நல அலுவலராக பணியாற்றி வருபவர் பார்த்திபன். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கடந்த 16ஆம் தேதி இவருடைய வீட்டில் சேலம் மற்றும் மதுரையைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திடீரென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, "கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மதுரை மாநகராட்சியில் சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் சுகாதாரப்பிரிவு வரவு செலவுகளை ஆய்வு செய்துள்ளார்.
அதில், 6 லட்சம் ரூபாய் வரை தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து முழு விசாரணை நடத்தும்படி மாவட்ட ஆட்சியரிடம் ஹக்கீம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் அந்தப் புகார் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் நடத்திய விசாரணயில், 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்ததில் 88 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக, அப்போது மாநகராட்சியில் பணியாற்றி வந்த மாநகர் நல அலுவலர் சதீஷ்குமார், இப்போதைய சேலம் மாநகர் நல அலுவலரும், அப்போதைய மதுரை உதவி மாநகர் நல அலுவலருமான பார்த்திபன், கண்காணிப்பாளர் மாலினி, உதவியாளர் குணசேகரன், கணினி உதவியாளர் அப்துல் கரீம், அலுவலக ஊழியர் ராமமூர்த்தி ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 16ஆம் தேதி பார்த்திபன் வீட்டில் சோதனை நடத்தியபோது இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.” இவ்வாறு லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)