
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள தபால் நிலைய சாலையில் மெக்கானிக் கடைகள், சர்வீஸ் ஸ்டேஷன், வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், உணவகங்கள் என சாலைகளின் இரு புறங்களிலும் பல்வேறு கடைகளும், வணிக நிறுவனங்களும் அதிக அளவில் இருக்கின்றன. இதனால், அந்த சாலை எப்போதும் கூட்ட நெரிசலோடு காணப்படும்.
இந்நிலையில், அந்த சாலையில் பயன்படுத்தப்படாமல் ஒரு பழைய கட்டடம் இருந்துவந்தது. அந்தக் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவரில் பெரும் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் இருந்தது. இதனைக் கவனித்த அந்தப் பகுதி பொதுமக்கள், உடனடியாக அதுகுறித்து காவல்துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி என அனைவருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் அங்கு விரைந்து வந்தனர். அதன்பின், மாநகராட்சியினர் உடனடியாக பொக்ளைன் இயந்திரத்தை வரவழைத்து, அபாயகரமாக இருந்த அந்தக் கட்டடத்தை இடித்தனர். இதன் காரணமாக ஒத்தக்கடை பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.