Skip to main content

அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்கக்கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

coronavirus vaccine dmk chief mkstalin wrotes to letter for prime minister

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்கிடுமாறும், மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறும் வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (18/04/2021) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

 

அந்த கடிதத்தில், "கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால், அதன் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும், அதன் சுழற்சியைத் துண்டிப்பதற்கும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுவதை, தங்களது கனிவான கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

 

கரோனா தொற்றுப் பரவல் கடந்த 7 நாட்களில் விரைவாக அதிகரித்து வருவதையும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்திருப்பதையும் தாங்கள் அறிந்திருக்கக் கூடும். 2021 ஏப்ரல் 17- ஆம் தேதியன்று வெளியான அதிகாரபூர்வத் தகவலில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 61,593 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆகவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டுள்ள போதிலும், நிலைமை கைமீறிப் போய்விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞரே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு சூழல் உள்ளது.

 

தாங்கள் அறிந்திருப்பதைப் போலவே, சமூக இடைவெளி, சுகாதாரமாக இருப்பது, முகக்கவசம் அணிவது இவைதவிர, தடுப்பு மருந்துகள் செலுத்துதலே மருத்துவப் பாதுகாப்பாகும். மேலும், தடுப்பூசி மருந்து மட்டுமே உலகளாவிய இந்தப் பெருந்தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காப்பதற்கு தற்போது கிடைக்கக் கூடிய ஒரே சிறந்த சாதனம் ஆகும். அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு இன்னும் எடுக்காத நிலையில். முன்னுரிமை தரப்பட்டுள்ள பிரிவினர் மட்டுமே, தற்போது தடுப்பூசியைப் பெற முடிகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, முதலில் தடுப்பூசியைப் பெறும் குழுவினர் மருத்துவத்துறையினரும் முன்களப்பணியாளர்களும்தான். இரண்டாவது குழுவினர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 முதல் 59 வயது வரையிலும்தான். அதிலும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்படுகிறது.

 

தடுப்பூசி செலுத்தும் பணியில், இத்தகைய கட்டுப்பாடுகளையும், முன்னுரிமைகளையும் வைத்துக் கொண்டு, இந்திய அரசால் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள தேவையான நபர்களுக்குக் கூட தடுப்பூசி செலுத்துவது மிகவும் சாத்தியற்றது. தமிழ்நாட்டில், வெறும் 46.70 லட்சம் பேர்களுக்குத்தான் இதுநாள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 40.64 லட்சம் பேருக்கு முதல் முறையும், 6.05 லட்சம் பேருக்கு இரண்டாவது முறையும் தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை மிக அதிக அளவில் இருப்பதுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள், தடுப்பு மருந்துகள் பற்றாக்குறையால் திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வருகின்றன. தற்போதைய வழிகாட்டுதலின் படியே, மத்திய அரசிடமிருந்து 20 லட்சம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை வழங்குமாறு, மத்திய அரசிடம், மாநில அரசு ஏற்கனவே கேட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பெருந்தொற்றின் கொடிய விளைவுகளிலிருந்து மனித உயிர்களைக் காக்க அனைவருக்கும் தடுப்பூசி என்பது காலத்தின் தேவையாகிறது. இந்தச் சூழ்நிலையில், பயனுள்ள தடுப்பூசியைச் செலுத்தும் பணியை நிறைவேற்றவும், நோய்த்தொற்றின் சுழற்சியை உடைக்கவும், நோய்ப் பாதிப்பைக் குறைக்கவும், தமிழகத்திற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதைவிட அதிகமான தடுப்பூசிகள் தேவைப்படும். தமிழ்நாடு ஒருபுறம் தடுப்பூசிப் பற்றாக்குறையால் தவிப்பதுடன், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தேவைப்படும் நபர்களுக்குக் கூட தடுப்பூசியைச் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

 

எனவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, மாநில அரசால் கேட்கப்பட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்புவதுடன், தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை அதிக அளவு வழங்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மனித உயிர்களைக் காப்பாற்ற ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திராமல், மாநிலங்களே சுதந்திரமாக மருந்துகளையும் தடுப்பூசிகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டியதும் முக்கியமாகிறது. சர்வதேச நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதிலும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தித் தந்து, பெருந்தொற்றை சுதந்திரமாகச் சமாளிக்க விடுவதில் மத்திய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. எனவே நேரடி கொள்முதல் செய்வதற்கு மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி, கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான உணர்வில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை விரைவாக எடுத்து, தற்போதைய கரோனா பெருந்தொற்று சூழலிலிருந்து தமிழகம் மீள உதவுமாறும், இந்தக் கொடிய கரோனா பேரழிவிலிருந்து மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கிடுமாறும் தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்." இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.