coronavirus vaccination camp in salem district collector announcement

Advertisment

சேலம் மாவட்டத்தில் ஏப். 30- ஆம் தேதி, 1,392 மையங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28- வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஏப். 27) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

அவர் கூறியதாவது, "கோவிட் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் ஏப். 30- ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

Advertisment

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், வாக்குச்சாவடி மையங்கள் உள்பட மொத்தம் 1,392 மையங்களில் இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழச் செய்ய வேண்டும். அதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 91.3 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 70.9 சதவீதம் பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 7.4 சதவீதம் பேருக்கும் போடப்பட்டு உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் உள்பட 15 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு இந்த மாபெரும் முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்ட மற்றும் ஊராட்சிகள் அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடன் வீடு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கோவிட் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றுதான் பாதுகாப்பான வழிமுறை ஆகும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா, மேட்டூர் உதவி ஆட்சியர் வீர் பிரதாப் சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் செல்வம், நலப்பணிகள் துறை இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குநர்கள் நளினி, ஜெமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.