Advertisment

கரோனா : சேலம் ரேஷன் கடைகளில் நிவாரண உதவித்தொகை பட்டுவாடா !

கரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில் இருக்கும் தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப். 2) ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் மற்றும் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருள்களும் விலையில்லாமல் வழங்கும் பணிகள் தொடங்கின.

Advertisment

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, 9 லட்சத்து 75 ஆயிரத்து 741 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமின்றி 882 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கும் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகையுடன், உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன.

Advertisment

coronavirus tamilnadu government fund in peoples

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ஒவ்வொரு நாளும் சராசரியாக 100 கார்டுதாரர்கள் வீதம் நிவாரணத் தொகை, உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எந்தெந்த நாளில் யார் யாரெல்லாம் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே பயனாளிகளிடம் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

கரோனா வைரஸ் தொற்று அபாயத்தைத் தவிர்க்க, ஒவ்வொரு ரேஷன் கடைகள் முன்பும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில், ஒவ்வொரு நபருக்கும் இடையில் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு கட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அடையாளக் குறியிட்ட இடத்தில் நின்று மக்கள் நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள்களை வாங்கிச் சென்றனர்.

சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகரில் உள்ள ரேஷன் கடை (எண்: 07ஏடி012பிஎன்) ஊழியர் வாசு என்பவர் கூறுகையில், ''எங்கள் ரேஷன் கடைக்கு உட்பட்ட கார்டுதாரர்களுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே நேரில் சென்று, டோக்கன் விநியோகம் செய்து இருந்தோம். முதல்கட்டமாக, 400 பேருக்கு டோக்கன் கொடுத்து இருந்தோம்.

அதன்படி, இன்று (ஏப். 2) 100 பேருக்கு நிவாரணத் தொகையுடன்,அந்தந்த கார்டுதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுக்கு உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன.சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காக, ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க கட்டங்கள் வரைந்து இருந்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக்கட்டைகள் அமைத்து வரிசையை ஒழுங்கு படுத்தினோம்.

மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து, பொருள்களை வாங்கிச் சென்றனர். மதியத்திற்குப் பிறகு மீண்டும் டோக்கன் விநியோகப் பணிக்குச் சென்று விட்டோம்.கடைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் சப்ளை செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல், ரேஷன் ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் சுகாதாரத்திற்காக கைகளைக் கழுவ சேனிடைசர், சோப்பு, பக்கெட், ஜக், முகக்கவசம் ஆகியவையும் வழங்கப்பட்டு இருந்தன,'' என்றார்.

இப்பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் ரேஷன் கடைகளுக்கு வரும் முன்னர், கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கைகளை நன்றாகச்சோப்பு போட்டு கழுவிவிட்டு வர வேண்டும்.கடையில் வரிசையில் நிற்கும்போது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.

நிவாரணத்தொகை மற்றும் உணவுப்பொருள்களை பெறுவதற்கான டோக்கன்கள் அவர்களைத் தேடி நேரடியாக வீட்டுக்கே வரும்.டோக்கன் பெறுவதற்காக யாரும் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டியதில்லை.டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்றால் போதுமானது.சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 97.66 கோடி ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது,'' என்றார்.

coronavirus ration shop District Collector Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe