கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கத் தேவைப்படும் கிருமி நாசினி மற்றும் முகக்கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க எடுத்த முடிவு என்ன? கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போதுமான அளவு கிருமி நாசினி மற்றும் முகக்கவசம் இருப்பை உறுதி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? மார்ச் 23-ல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தமிழகத்தில் கரோனா அச்சத்தால் 2984 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவங்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், அவை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுத்து நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில், பிற மாநில அரசுகள் உத்தரவுகளைப் பிறப்பித்த போதும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள முகக்கவசம், கிருமி நாசினிகளைப் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும். சென்னையில், முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலை உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்காது. மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தமிழக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுகாதாரத்துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சந்தேகத்தின் பேரில் உள்ள 222 பேரில் 166 பேருக்கு கரோனா இல்லை எனவும், 2 பேருக்கு அறிகுறி இருப்பதாகவும், 54 பேரின் மாதிரிகள் சோதனையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 19.30 லட்சம் முகக்கவசங்கள் இருப்பில் உள்ளதாகவும், பள்ளிகள், கல்லுரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா சந்தேகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 044-29510500/400, 9444340496, 8754448477 மற்றும் 104 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எஃப்.எம். விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து அண்மையில் தமிழகத்திற்கு வந்த 1,89,780 பயணிகளில் 2,984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அரசுத் தரப்பில் வழக்கறிஞர், சானிடைசருக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அதை நிறுத்திவைத்துள்ளோம் எனத் தெரிவித்தார். முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்ய எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் கிருமி நாசிகனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு கிருமி நாசினிகள் மற்றும் முகக்கவசங்கள் விற்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளைத் தள்ளிவைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால், தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதுதொடர்பாகவும் அரசுத் தரப்பு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 23- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.