Skip to main content

"அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்"- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

coronavirus prevention tn govt dmk chief mkstalin

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (19/04/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று நோய்ப் பரவல் இரண்டாவது பேரலையாகப் பரவத் தொடங்கி இருக்கிறது. தொற்றுப் பரவல், பாதிப்பு, தாக்கம், குணமாகும் தன்மை, விளைவுகள் ஆகியவை மிக மோசமானதாக இருக்கின்றன என்றே மருத்துவ நிபுணர்கள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 20- ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

 

தினமும் இரவு நேரம் முழுவதும் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அவசியப் பயன்பாட்டு விஷயங்கள் நீங்கலாக மற்றவை அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

கரோனா நோய்த் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுவதை முற்றிலுமாகத் தடுத்தாக வேண்டும். அதற்கு ஊரடங்கு மிக அவசியமானது. எனவே இந்த ஊடரங்கு காலக்கட்டத்தில் அவசியப் பயன்பாட்டுக்காக மட்டுமே வெளியில் வந்து செல்லுங்கள். மற்ற நேரங்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் பயன்படுத்துதல், கிருமிநாசினி பயன்பாடு ஆகியவற்றின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டியது இல்லை! 'நமக்கெல்லாம் கரோனா வராது' என்பது போன்ற அலட்சியம் எப்போதும், யாருக்கும் தேவையில்லை. அத்தகைய அலட்சியம் இருக்கக் கூடாது.

 

நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளை, குறிப்பாக கபசுரக் குடிநீர் போன்றவற்றை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வருமுன் காப்போம் என்பதுதான் அனைத்துக்கும் அடிப்படையானது. நமது முன்னோர்கள், 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில், நமது உணவையும் சத்தானதாக, ஆரோக்கியமானதாக அமைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலம், மனநலம் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். கரோனா தாக்கி, அதில் இருந்து மீண்டவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 

ஊரடங்கு அறிவித்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கக் கூடாது. கரோனா என்பது அச்சம் தரும் நோயாக உள்ளது. இந்த அச்சத்தை அரசுகள்தான் முன்வந்து போக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். படுக்கை வசதிகள், மருத்துவர்கள் தயார் நிலையில் இருத்தல் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

 

உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் வேதனை அளிப்பதாக உள்ளன. மக்களின் தேவைக்கு ஏற்ற மருத்துவமனைகள் இல்லை, படுக்கைகள் இல்லை, தடுப்பூசிகள் இல்லை என்ற செய்திகளில் மிகுந்த அக்கறையுடனும், அவசரத்துடனும், அவசியத்துடனும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசியல் உள்நோக்கம் இல்லாமல் மாநில அரசுகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு உதவிகள் செய்ய வேண்டும். மீண்டும் வாழ்வாதாரம் இழக்கும் சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கைச் சூழலையும் அரசுகள் மனதில் வைத்து நலத்திட்ட உதவிகள், நிவாரணங்களைச் செய்து தர வேண்டும்.

 

கரோனா மேலும் பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காத்தல், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்க்கு உதவுதல் ஆகிய மூன்றையும் முக்கியக் கடமைகளாகக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்