Skip to main content

நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

coronavirus prevention tn govt announcement

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைத் தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை மறுநாள் (20/04/2021) முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

 

 

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்: 

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (20/04/2021) காலை முதல் அமலாகின்றன. 

 

தமிழகத்தில் நாளை மறுநாள் (20/04/2021) முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இரவு நேர ஊரடங்கு அமலாகும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை பேருந்துகள் ஓடாது. 

 

தனியார், பொதுப்போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி வாடகை வாகனங்கள் இரவு நேரத்தில் அனுமதி இல்லை. 

 

இரவு நேர ஊரடங்கின் போது வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் இடையேயான தனியார், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. 

 

ரயில், விமான நிலையங்களுக்கு டாக்ஸி அனுமதிக்கப்படும் என்பதால் ரயில், விமானங்கள் வழக்கம் போல் இயங்கும். 

 

தேநீர், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், காய்கறிக் கடைகள், ஷோரூம்கள், உணவகம், வணிக வளாகங்கள், நகை மற்றும் ஜவுளிக்கடைகள் இரவு 09.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் நிறுவன இரவு காவல் பணிகளில் ஈடுபடுவோர் வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று திரும்ப அடையாள அட்டை (அல்லது) அனுமதி கடிதம் வைத்திருப்பின் அனுமதி அளிக்கப்படும்.

 

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 

 

ஐ.டி. ஊழியர்கள் குறைந்தபட்சம் 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வில் 50 பேரும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

நீலகிரி, கொடைக்கானல்,ஏற்காடு போன்ற சுற்றுலா தலத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 

 

பூங்காக்கள், உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவற்றுக்கு அனைத்து நாட்களிலும் அனுமதி இல்லை. 

coronavirus prevention tn govt announcement

 

புதிதாக குட முழுக்கு, திருவிழா போன்றவற்றுக்கு தற்போதைய சூழலில் அனுமதி இல்லை. குடமுழுக்கு போன்றவற்றுக்கு ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தால் 50 பேருக்கு மிகாமல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும். அதேபோல் அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். 

 

கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்களில் ஆன்லைனில் பயிற்சி தரலாம். 

 

ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம். 

 


முழு ஊரடங்கின் போது எந்தெந்த பணிகளுக்கு அனுமதி? 

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

 

பால், பத்திரிகை விநியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, சரக்கு வாகனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விவசாய விளைபொருள், பெட்ரோலிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 

 

போக்குவரத்து சேவையின் போது பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.

 

முழு ஊரடங்கு நாளில் உணவகங்கள் காலை 06.00- 10.00, நண்பகல் 12.00- 03.00, மாலை 06.00- 09.00 மணி வரை பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

முழு ஊரடங்கு நாளில் இறைச்சி, மீன், காய்கறிக் கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

பிற இ-காமர்ஸ் நிறுவனங்களின் பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.

 

முழு ஊரடங்கை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதிச் செய்ய வேண்டும். ஆக்சிஜன் உற்பத்திச் செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு தற்காலிக உரிமம் வழங்க வேண்டும். நோய்த் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

 

திரையரங்குகளில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாவிடில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருமண மண்டபங்களில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாவிடில் மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவகம், தேநீர் கடைகளில் கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய வேண்டும். கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். விருப்பப்படும் தங்கும் விடுதிகள் கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படும். மருத்துவ வசதி, உட்கட்டமைப்பு கொண்ட தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும். தங்கும் விடுதிகளில் சுகாதாரத்துறை ஆய்வு செய்து தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். அனுமதி பெறும் தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களைத் தங்க வைக்கக்கூடாது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்