
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, டெல்லி, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆக்சிஜன் விநியோகம், கரோனா தடுப்பூசி விநியோகம், ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் விநியோகம், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் அவ்வப்போது மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (18/05/2021) இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (18/05/2021) காலை 11.00 மணிமுதல் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனையில் தமிழகம், கர்நாடகா, பீகார், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், கோவா, அசாம், சண்டிகர், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களும், அந்தந்த மாநில முதல்வர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
காணொளி மூலம் நடைபெற்றுவரும் ஆலோசனையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துவருகிறார்.
முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.