Advertisment

வாடகை வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி கோரி மனு!- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! 

coronavirus lockdown taxi owners chennai high court

Advertisment

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரிய மனு குறித்து, அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், அதன் செயலாளர் ஜூட் மேத்யூ தாக்கல் செய்த மனுவில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, வாடகை கார்கள் இயக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் வாடகை கார்களின் உரிமையாளர்களே ஓட்டுனர்களாக உள்ளனர். அவர்கள், தினசரி வருமானத்தை நம்பியே உள்ளனர். ஊரடங்கு காரணமாக, அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண நேரங்களில், சாலை வரிகள் உள்ளிட்ட தேவையான அனுமதிகளுக்கு உரிய கட்டணங்களைச் செலுத்துகின்றனர். தற்போதைய அசாதாரண சூழ்நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு, நிதியுதவியாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தகுதிச் சான்றை புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்கவேண்டும். வாகன காப்பீட்டுக்கும், ஆறு மாத அவகாசம் வழங்கவேண்டும். போக்குவரத்து வாகனங்களுக்கு, பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம், மாநிலங்களுக்கு இடையிலான வரியில் இருந்து விலக்களிக்கவேண்டும். சமூக நல வாரியத்தின் மூலம் முடி திருத்துவோர், நெசவாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Advertisment

இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட வாடகை வாகன உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீஸல், பெட்ரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனமனுதாரர் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனு குறித்து அரசின் கருத்துகளை அறிந்து தெரிவிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1- ஆம் தேதிக்குத்தள்ளிவைத்தனர்.

chennai high court coronavirus government lockdown taxi owners
இதையும் படியுங்கள்
Subscribe