Advertisment

கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது!- உயர்நீதிமன்றம் உத்தரவு!

coronavirus lockdown electricity bill peoples chennai high court order

Advertisment

ஊரடங்கு முடியும்வரை கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏப்ரல் 13- ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள், ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே 6- ஆம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததது.

மேலும், மின்கட்டண கவுண்டா்களுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், ஏற்கெனவே பயனீட்டாளா்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், மே 6- ஆம் தேதிக்குள் மின் கட்டணம் என்ற இறுதிக் கெடுவை ரத்து செய்யக்கோரியும், ஜூலை 31- ஆம் தேதி வரை தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடக்கோரியும் வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனரான வழக்கறிஞர் சி.ராஜசேகர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

அவரது மனுவில், வீட்டு மின் இணைப்பு பெற்றவர்கள், விவசாயிகள், சிறு குறு நிறுவனங்கள் ஆகியவை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே 6- ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்துவது என்பது சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் வருமானம் இழந்திருப்பதைத் தமிழக அரசும், மின்சார வாரியமும் கருத்தில் கொண்டு ஜூலை 31- ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்க உத்தரவிட வேண்டுமென பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.

மே 6- ஆம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தாத இணைப்பைத் துண்டிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத்கோத்தாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 18- ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், தாழ்வான மின் இணைப்புகளைத் துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து அரசு முடிவு எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

lockdown coronavirus chennai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe