ADVERTISEMENT

கரோனா தொற்று பரிசோதனையை விரைவுபடுத்தக் கோரி வழக்கு!- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம்  உத்தரவு!

09:16 AM Apr 18, 2020 | santhoshb@nakk…


கரோனா தொற்று பரிசோதனையை விரைவுபடுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அடுத்த வாரம் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்- இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் கரோனா தொற்று முதன்முதலாக மார்ச் 7- ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கண்டறியப்பட்டது முதல், அதன் காரணமாக 144 தடை உத்தரவு மே 3- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது வரை சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT


ஊரடங்கு உத்தரவை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ள மத்திய, மாநில அரசுகள் கரோனா தொற்று பரிசோதனையை நடத்துவதற்கான நடவடிக்கையை விரிவுபடுத்தவோ, விரைவுபடுத்தவோ இல்லை. குறிப்பாக, கரோனா தொற்றை விரைந்து கண்டுபிடிக்கக்கூடிய ரேபிட் டெஸ்ட் கருவிகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏப்ரல் 14- ஆம் தேதி, சுகாதாரத்துறை கணக்கின்படி 48 ஆயிரத்து 440 பேர் தனிமைப்படுத்தபட்டு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், 12 ஆயிரத்து 746 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், தனிமைப் படுத்தப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கரோனா தொற்று பரிசோதனை செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT


இதன் காரணமாக நாளுக்கு நாள் கரோனா தொற்று உள்ளவர்கள் அதிகரிக்கும் நிலையில் இருப்பதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு கரோனா தொற்று உள்ளவர்களோடு தொடர்புடையவர்களுக்கு கரோனா பரிசோதனையை விரைவுபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் அடுத்த வாரம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT