ADVERTISEMENT

ஆசிரியையின் கருணை!

12:42 PM May 10, 2020 | rajavel




தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு, தன் சொந்தப் பணத்தில் இருந்து உதவித் தொகையையும் தன் முயற்சியில் நிவாரணப் பொருட்களையும் வழங்கி, எல்லோரையும் நெகிழவைத்திருக்கிறார் ஒரு பள்ளி ஆசிரியை.

ADVERTISEMENT


நாகை மாவட்டம் கருப்பம்புலத்தைச் சேர்ந்தவர் கமலவல்லி. அவர் இங்குள்ள ஞானாம்பிகா அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்தப் பகுதியில், பெரும்பாலானவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அவர்களில் பலரும் இந்தக் கரோனா நெருக்கடியால் வேலைக்குச் செல்லமுடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதையறிந்த ஆசிரியை கமலவல்லி, தங்கள் பள்ளியில் படிக்கும் 28 மாணவர்களின் குடும்பத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க முடிவெடுத்தார்.


இதை மேலதிகாரிகளுக்குத் தெரிவித்து உரிய அனுமதியையும் பெற்றார். இதையறிந்த ஒருசிலர், தங்கள் முயற்சியில் மளிகைப் பொருட்களை அவரிடம் வாங்கிக்கொடுக்க, அத்தனை மாணவர்களின் குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கமும், அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் வழங்கினார் கமலவல்லி. இதை மாணவர்களின் குடும்பத்தினர் மகிழ்வோடும் நெகிழ்வோடும் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தனர்.


இது குறித்து ஆசிரியை கமலவல்லியிடம் கேட்டபோது ”அந்த மாணவர்களை வைத்துதான் ஆசிரியர்களான எங்கள் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. அதை எந்த நிலையிலும் என்னால் மறக்கமுடியாது. அப்படியிருக்க, இப்போதைய நெருக்கடியான நேரத்தில் மாணவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கஷ்டப்படுவதை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். அதனால்தான், என் நெருக்கடியைக் கூடப் பொருட்படுத்தாமல், என் குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு இந்த உதவியைச் செய்தேன். அடுத்தவர்களின் துன்பத்தையும் சுமையையும் பகிர்ந்துகொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியே அலாதியானது" என்கிறார் உற்சாகமாய்.

ஆசிரியை கமலவல்லிக்கு பல திசையிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT