ADVERTISEMENT

கரோனா விழிப்புணர்வு பதாகையுடன் கை கழுவத் தண்ணீர் குழாய் திறந்த ஊராட்சி மன்றத் தலைவர்!

02:36 PM Mar 17, 2020 | santhoshb@nakk…

கொடியதிலும் கொடியது கரோனா வைரஸ். சீனாவில் பிறந்து உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கண்ணுக்குத் தெரியாத கிருமியால் யாரிடமும் நின்று பேசக் கூட முடியவில்லை. "வருமுன் காப்போம்" என்ற அடிப்படையில் அரசுகள் கைகளை நன்றாக கழுவுங்கள் என்று பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ரகுமத்துல்லா என்ற ஊராட்சி மன்றத் தலைவர் கிராமத்தின் நுழைவு வாயிலிலேயே விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய கை கழுவும் தண்ணீர் குழாய்களையும் திறந்து வைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

'வருமுன் காப்பதே சிறந்தது' என்னும் பழமொழிக்கேற்ப, நம்மை கரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் சற்று அதிக கவனம் செலுத்தினால், எவ்வித நோயும் நம்மை அணுகாமல் தடுக்கலாம். கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் பரவிவிடக் கூடாது என்பதற்காக எல்கேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்புகள் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. இன்று முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செந்தலைவயல் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ரகுமத்துல்லா, கரோனாவை தடுக்கும் விதமாக பேருந்து நிலையத்தில், விழிப்புணர்வு பதாகை, வைத்துள்ளார். மேலும், வெளியூருக்குச் செல்பவர்கள், ஊருக்குள் வருபவர்கள் அனைவரும், கை கழுவுவதற்காக டெட்டால் கிருமி நாசினி அமிலங்கள் மற்றும் சோப்பு வைக்கப்பட்டு, தற்காலிக தண்ணீர் குழாய் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஊருக்கு வருபவர்கள், வெளியூர் செல்பவர்கள் கை, கால்களை நன்றாக கழுவி, சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ரகுமத்துல்லா கூறும் போது, "மற்ற நாடுகளில் வந்த பிறகு திண்டாடுவர்கள். ஆனால் தமிழ்நாட்டில் தான் எப்பவுமே வரும் முன்பே தடுப்போம். அதனால் தான் எந்த நோயும் நம்மை அதிகம் தாக்குவதில்லை. அந்த அடிப்படையில் தான் எப்பவும் நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறோம். இப்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கை கால் சுத்தமாக இருந்தாலே தடுக்க முடியும் என்கிறார்கள். அதனால் தான் ஊரின் எல்லையில் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீர் குழாய்கள் திறந்து விழிப்புணர்வு வாசகங்களுடன் கிருமி நாசினி அமிலங்கள், சோப்புகளை வைத்திருக்கிறோம். வெளியூர் சென்று வீட்டுக்குத் திரும்பும் தந்தையைப் பார்த்து குழந்தை ஓடி வந்து கட்டிப் பிடிக்கும். அந்தப் பாசத்தில் தந்தை கை, கால் கழுவ நினைத்திருந்தாலும் மறந்துவிடுவார். அதனால் தந்தையிடம் இருந்து குழந்தைக்கு கிருமி பரவி விட வாய்ப்புகள் உள்ளது. அதனால் தான் பேருந்து நிறுத்தத்திலேயே கை கழுவ வசதி இருந்தால் இங்கேயே கழுவிவிட்டுச் சென்றால் அந்தப் பிரச்சனை இருக்காதே, அதனால் தான் இந்த ஏற்பாடுகள்" என்றார்.

நோய்த் தடுப்பு ஏற்பாடுகளை செய்துள்ள ஊராட்சி மன்றத் தலைவர் ரகுமத்துல்லா மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், கல்லூரிகள், பள்ளிகள், வங்கிகள், அரசு மற்றும் ஆட்சியர் அலுவலகங்கள், சந்தைகள் போன்ற இடங்களிலும் கை கழுவும் வசதிகளை ஏற்பாடு செய்தால் கரோனா வைரஸ் யாரையும் தாக்காமல் காக்க முடியும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT