
இரண்டாவது தவணை கரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (31/05/2021) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (31/05/2021) காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை மக்களுக்கு வழங்குவது குறித்தும், ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தியது பற்றியும் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேஷன் கடையில் மே மாதம் ரூபாய் 2,000 நிவாரண நிதி தரப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை கரோனா நிவாரண நிதி ரூபாய் 2,000 இம்மாதம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.