கரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட 12 நாள் முழு ஊரடங்கு சென்னையில் அமலுக்கு வந்தது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
செங்கல்பட்டில் எந்தெந்த பகுதிகளில் முழு ஊரடங்கு?
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மேலும் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் எந்தெந்த பகுதிகளில் முழு ஊரடங்கு?
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. மேலும் பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் எந்தெந்த பகுதியில் முழு ஊரடங்கு?
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எவை செயல்படும்? எவை செயல்படாது?
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு பகுதியில் 12 நாட்களுக்கு இறைச்சிக் கடைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகள் காலை 06.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் நடமாடு கடைகளும் மதியம் 02.00 மணி வரை மட்டுமே இயங்கும். அத்தியாவசியப் பொருட்களை இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் நடந்து சென்றுதான் மக்கள் வாங்க வேண்டும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தேனீர் கடைகள் திறக்க 12 நாட்களுக்கு அனுமதி இல்லை.
முழு ஊரடங்கில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குத் தடை கிடையாது.
உணவகங்களில் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை பார்சல் பார்சல் சர்வீஸ் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு மருத்துவர் தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ மற்றும் டாக்சி போன்றவை அனுமதிக்கப்படுகிறது. நான்கு மாவட்டங்களில் ஏ.டி.எம். மற்றும் அதைச் சார்ந்த வங்கிப் பணிகள் மற்றும் போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும். ஜூன் 29, 30 ஆம் தேதிகளில் மட்டும் வங்கிகள் 33% பணியாளர்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மட்டுமே ரேஷன் கடைகள் செயல்படும். மேலும் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நேரடியாக ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்படும். ரூபாய் 1000 நிவாரணம் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதால் ஜூன் 22- ஆம் தேதி முதல் ஜூன் 26- ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது.
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் 12 நாட்களுக்கு உணவு இலவசம்.
சென்னையில் போலீசார்தீவிர வாகன சோதனை:
12 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்ணா மேம்பாலம் மற்றும் வடபழனி உள்ளிட்ட முக்கியச் சாலைகள் மூடப்பட்டு தீவிர வாகன சோதனை நடக்கிறது. முழு ஊரடங்கு தீவிர வாகன சோதனை காரணமாக சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அதேபோல் சில நாட்களாக பரபரப்பாகக் காணப்பட்டு வந்த பரனூர் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.