ADVERTISEMENT

கரோனா பரவும் என பத்தாம் வகுப்பு தேர்வுகளைத் தள்ளி வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!- உயர்நீதிமன்றம்!

07:53 AM May 16, 2020 | santhoshb@nakk…


ADVERTISEMENT


மாணவர்களுக்கு கரோனா பரவும் அபாயம் உள்ளதால், 10- ஆம் வகுப்பு தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


கரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25- ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜூன் 1- ஆம் தேதி முதல் 10- ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதை எதிர்த்து, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. 200 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்குப் படிக்க வரும் பெரும்பாலான மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி ஏற்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்வின் போது மாணவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவார்களா என்பது கேள்விக் குறியாகி உள்ளது. எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டையும் செய்யாமல் தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்கு கரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்வரை 10- ஆம் வகுப்பு தேர்வை நடத்தக் கூடாது. தேர்வைத் தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.


இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஸ்டாலின் ராஜா, நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. அதை, அரசு கருத்தில் கொள்ளாமல் பொதுத் தேர்வுகளை அறிவித்துள்ளது. பெற்றோர், குழந்தைகளை அனுப்பப் பயப்படுகின்றனர். பள்ளிக் குழந்தைகள் எந்த அளவிற்குச் சமூக இடைவெளியைப் பின்பற்றுவர் என்பது தெரியவில்லை.

அதனால், சி.பி.எஸ்.இ. போல பத்தாம் வகுப்புத் தேர்வை ஜூலை மாதத்துக்குத் தள்ளிவைக்கலாம். ஜூன் மாதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பல மாநிலங்கள், தேர்வுகளை ரத்து செய்துள்ளன. சில மாநிலங்களில் தேர்வுகள் ஜூலைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதையே, தமிழக அரசும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கல்வியாண்டு ஏற்கனவே தள்ளிப்போய்விட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கமோ, அரசு ஆசிரியர் சங்கமோ நீதிமன்றத்தை நாடவில்லை. மாணவர் அல்லது பள்ளி தரப்பில் யாரும் வழக்கு தொடரவில்லை. அரசு உத்தரவால் பாதிக்கப்படாத வழக்கறிஞர் தொடர்ந்த பொது நல வழக்கை எப்படி அனுமதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என, மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT