தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குப்பதிவின் போது கரோனா தடுப்பு விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, இன்று (26/03/2021) தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கைகளின் போது கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதைத் தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், அனைத்து அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் பரப்புரையின்போது கரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் வேட்பாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.