Advertisment

கரோனா பாதிப்பு அதிகரிப்பு - மதுக்கடைகளை மூட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

hjk

இந்தியா முழுவதும் கரோனா மூன்றாம் அலை தீவிரம் அடைந்து வருகிறது. நாட்டில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு ஒருபுறம் மிரட்டுவதால் மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் இந்த விடியா அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதை, அ.தி.மு.க. சார்பில் சுட்டிக்காட்டிய போதெல்லாம், கரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை இந்த விடியா அரசு வெளியிட்டது. ஆனால், இந்தச் சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராக்கெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நோய்த் தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக இந்த அரசே செய்திக் குறிப்பினையும் வெளியிடுகிறது. ஆனால், உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களும், மருத்துவர்களும் தகவல் தெரிவிக்கின்றனர். அம்மாவின் அரசு எடுத்த இடையராத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தேர்தல் அறிவித்த 2021, பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கரோனா நோய்த் தொற்றால் சுமார் 500 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Advertisment

2020-ம் ஆண்டு மே மாத முதல் வாரத்தில், தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 775. அந்தக் காலக்கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த இன்றைய இந்த விடியா அரசின் முதல் அமைச்சராக இருக்கும் ஸ்டாலின், டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறந்திருப்பதால்தான் கரோனா தொற்று பரவுகிறது என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார். மேலும், ஸ்டாலின் உட்பட அவரது கட்சியினர் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனால், இன்றைக்கு இந்த விடியா திமுக அரசின் வாக்குமூலப்படி, தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிய கொரோனா நோய்த் தொற்று, தற்போது காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து 9 நபர்களுக்குப் பரவுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாக செய்திகள் வெளிவருகின்றன. இதை மா. சுப்பிரமணியனும் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்த விடியா தி.மு.க. அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று தி.மு.க. செயல்படுகிறது. ஆகவே, இந்த விடியா திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல், தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe