/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/609_9.jpg)
கரோனோ நோய் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் மே-17ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 7நாட்களே உள்ள நிலையில் கரோனோ நோய் தொற்றின் பரவல் அதிகமாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கரோனா தொற்று தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சுகாதார ஆய்வாளர். இவர் களப்பணிக்கு சென்றபோது நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதையடுத்து வில்வ நகர் பகுதியில் சுகாதார ஆய்வாளர் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டின் அருகில் உள்ள தெருக்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அங்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விருத்தாசலம் காந்திநகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் கரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கும் கரோனா தொற்றிருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் அந்த பெண் மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. இந்த நகப்புற அரசு ஆரம்ப சுகாதார சுகாதார நிலையம் உள்ள பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு நோய்களுக்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளதால் அவர்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் அந்த மருத்துவர் உடன் பணிபுரிந்த சக மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மற்ற வட்டாரங்களில் உள்ள மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ ஊழியர்கள் என பலர் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நோய்த்தொற்று இருக்குமோ என அஞ்சப்படுகிறது. அவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மேலும் கோயம்பேடுக்கு சென்று வந்த இரண்டு பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 393 ஆக உள்ளது. இவர்களில் 85 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 57 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், 67 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 31 சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், 17 பேர் திட்டக்குடி அரசு மருத்துவமனையிலும் தனி வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 2,722 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 6,785 பேரின் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 393 பேருக்கு கொரோனா இருப்பதும் 5922 பேருக்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 465 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_349.gif)