அண்டசராசரத்தையும் அதிபயங்கரத்தில் தள்ளி மனித படுகொலைகளை நடத்துகிற கரோனா வைரஸ், இருமல், சளி மற்றும் தும்மல் வெளிப்பாடுகளின் மூலமாகவே அடுத்தவரைத் தொற்றுகின்றன. இதனடிப்படையில்தான் தங்களின் பாதுகாப்பிற்காக மக்கள் வெளியேறும் சமயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றுவலியுறுத்தப்படுகிறது. இது போன்ற நெருக்கடியான நேரத்தில்கூட சாதாரணமாக எச்சில் துப்புபவர்களைக்கூட பீதியோடு பார்த்து ஒதுங்கிப் போகவேண்டியிருக்கிறது. எல்லாம் கரோனா படுத்தும்பாடுதான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11111_237.jpg)
நெல்லை மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்த பீர்முகமது (38) நடைபாதையில் ஜவுளி விற்பனை செய்து வருபவர். இவர் நேற்று மாலை தன் வீட்டின் முன்னே நின்ற சமயம், அதே ஊரைச் சேர்ந்த லாரி டிரைவரான சுரேஷ் நடந்து வந்துள்ளார். அப்போது தற்செயலாக பீர்முகம்மது சாலையில் எச்சில் துப்பவே, அதை சுரேஷ் கண்டித்திருக்கிறார். மனதிற்குள் கரோனா பயம் தவிர வேறில்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமான சுரேஷ், பீர்முகமதுவை அடித்து உதைத்துக் கீழே தள்ளிவிட, பீர்முகமதுவிற்கு பின் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து பீர்முகமதுவின் உறவினர்கள் அவரை சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்பு, மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பீர்முகமதுவின் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த எஸ்.ஐ. தயானந்த், சுரேஷைகைது செய்து பாளை ஜெயிலில் ரிமாண்ட் செய்தார். உயிரை எடுக்கும் கரோனா உள்ளே தள்ளிக் கம்பி எண்ணவும் வைத்திருக்கிறது.
Follow Us