Skip to main content

“கரோனாவுக்கு கிராமத்துல என்ன வேலை?” -தேவை விழிப்புணர்வு!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கரோனா ஊரடங்கினால், வீட்டில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தும், செல்போனில் வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர்,  யுடியூப்களை மேய்ந்தும், பொழுது போக்குவதே நாட்டில் பலருக்கும் பெரும் சிரமமாக ஆகிவிட்ட நிலையில், மருத்துவத்துறையில் சேவையாற்றுவோரும்,  காவல்துறையில் பணியாற்றுவோரும், நெருக்கடியான நிலையை உணர்ந்து, நாம் அனைவரும் நன்றி செலுத்தும் விதத்தில்,  செவ்வனே கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.  

 

corona virus situation in village

 


 
கரோனா ஒருபக்கம் கொடூரமாக அச்சுறுத்தினாலும், எந்த சலனமுமின்றி, இயங்கிக்கொண்டே இருப்பவர்கள், நம்மிடையே உள்ளனர். அவர்களில் சிலரை சந்தித்தோம்.

இரவு நேரத்திலும் பரபரப்பாக துப்புரவு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள், அந்த தூய்மைப் பணியாளர்கள். அவர்களின்  கவனமெல்லாம்,  அங்கங்கே கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்துவதிலேயே இருந்தது. பிளாட்பார வாசிகளான இரு பெண்கள் அங்கே சாலையோரம் சோகமாக அமர்ந்திருந்தனர். சாலையில் நடமாட்டம் இருந்தால்தானே, யாராவது கருணை கண் கொண்டு பார்த்து உதவுவர் என்ற கவலை அவர்களின் அழுக்கு முகத்தில் பளிச்சென்று வெளிப்பட்டது.

பால், அத்தியாவசியமாயிற்றே! தனது மாட்டிலிருந்து பால் கறந்துகொண்டிருந்த சண்முகய்யா, “கறக்கிற வேலை பெரிசில்ல.. எல்லா பாலையும் நல்லபடியா வாடிக்கையாளர் வீட்ல கொண்டுபோய் சேர்க்கணும்... ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.” என்றார்.

 

corona virus situation in village

 



பாரத் காஸ் சிலிண்டர் கம்பெனியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் தொழிலாளர்கள். டூ வீலரில் சிலிண்டர்களுடன் கிளம்பிய ஆசைத்தம்பி,  ‘அத்தியாவசிய சேவை துறை’ என, தங்களுக்கு வழங்கியிருந்த சான்றிதழை நம்மிடம் காண்பித்தார். “பஸ் இல்ல.. ரயில் இல்ல.. ஆனா. எப்பவும் போல எங்களுக்கு வேலை. பெருமையாத்தான் இருக்கு.” என்றார்.

ட்ரை சைக்கிளில் வந்த அந்த தேங்காய் வியாபாரி,  வீடுகளில்  ’டோர் டெலிவரி’ செய்துகொண்டிருந்தார்  “எங்களுக்கு தேங்காய்க் கடை இருக்கு. ஆனாலும், மக்கள் யாரும் தேங்காய் வாங்குறதுக்குன்னு வீட்ல இருந்து கடைக்கு வரவேணாம்னு நாங்களே அவங்கள தேடி வந்திருக்கோம்.” என்றார்.

அக்கா, தம்பியான வேல்விழியாளும் விக்னேஷ்வரனும் தொடர்ந்து பள்ளி விடுமுறை என்பதால், மாடுகள் இரை எடுப்பதற்காக இழுத்துச் சென்றனர். விக்னேஷ்வரன் சொன்னான். “அக்காக்கு கொரொனாக்கு ரொம்ப பயப்படறா. எனக்கு பயமில்ல.” என்றான் சிறுபிள்ளைத்தனமாக.

 

corona virus situation in village

 



வாழை வெட்டுவதற்காக மம்பட்டியும் கையுமாக தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தனர், அந்த நான்கு பெண்களும்.  “அங்கிட்டு வேலை பார்த்துக்கிட்டிருப்போம். இங்கிட்டு பாம்பு நெளிஞ்சுக்கிட்டிருக்கும். பாம்புக்கே நாங்க பயப்படறதில்ல. ஆனா.. பாம்பைவிட இந்த கரோனா மோசம்கிறாங்க. என்னத்த பேசி என்ன பண்ண? விதியிருந்தா பொழச்சிக்குவோம்” என்றனர்.

அந்த வாழைத் தோப்பில் முனியாண்டி நம்பக்கம் திரும்பாமலே வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மகன் சுரேஷ் செடிகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். “இந்தக் களையெல்லாம் பிடுங்கினாத்தான் கன்னு எந்திரிக்கும். கொரனா எங்கள எதுவும் பண்ணாது. கிராமத்து பக்கம் அதுக்கு என்ன வேலை?” என்றார், வெள்ளந்தியாக.

கரோனா வீடுகளில் பலரை முடக்கினாலும், அவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் மக்கள் இயங்கியபடியே உள்ளனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.