கரோனா நோய் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தால் அறிவிக்கப்பட்ட ‘ஒன்றிணைவோம் வா’எனும் முழகத்தின் கீழ் உதவி தொலைபேசி எண்கள்அறிவிக்கப்பட்டன.
இந்த தொலைபேசி எண்கள் பரவலாக மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. உதவி வேண்டும் என நினைக்கும் பொதுமக்கள் இதில் தொடர்பு கொள்ள துவங்கியுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் ஒன்றியம், இனாம்காரியந்தல் ஊராட்சியை சேர்ந்த பாபு (எ) சேகர், தனது குடும்பம் வறுமையில் உள்ளது, மளிகை பொருட்கள் தேவைப்படுவதாக திமுக தலைமை வெளியிட்டுள்ள தொலைபேசி எண்ணில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றியதகவலை உடனடியாக அந்த தொகுதியின் எம்.எல்.ஏவான முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியின் கவனத்துக்கு, அந்த குழு அனுப்பியது. அதனை தொடர்ந்து அந்த குடும்பத்துக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மே 1ந்தேதி வழங்கப்பட்டது. அதோடு, வேறு யாராவது வறுமையில் உள்ளார்களா என அக்கிராம கட்சி நிர்வாகிகளிடம் பேசி தகவல் அறிந்து அவர்களை தனது வீட்டுக்கு வரவைத்து 20க்கும் மேற்பட்டவர்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி போன்றவற்றையும்வழங்கியுள்ளார்.
அதேபோல், கலசபாக்கம் தொகுதி கலசபாக்கம் கிழக்கு ஒன்றியம் தென்பள்ளிப்பட்டு ஊராட்சி அகதிகள் முகாமை சார்ந்த மா.ரமேஷ், பி.ரமேஷ், பிரபாகரன் என்பவர்கள், வருமானம் இன்றி அன்றாட உணவிற்கே மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் தங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் தரமுடியுமா என உதவிக்கேட்டும் தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்த தகவலை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் உடனே இதுப்பற்றி தனது மகனும், கலசப்பாக்கம் தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர் கம்பனிடம் உதவி செய்யுமாறு கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.