Skip to main content

கரோனா நிவாரணத்திற்கு ஒரு மாத சம்பளத்தை தரும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள்!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்திரவு 21 நாட்களில் இன்று மூன்றாம் நாள். இந்நிலையில் அரசு நிவாரண நிதிகளை அறிவித்துள்ளது. அதே போல் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஐம்பது லட்சம், ஒரு கோடி என அறிவித்துள்ளார்கள். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி-களான கேரளாவைச் சேர்ந்த பினாய் விஸ்வம், தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் சுப்பராயன் மற்றும் நாகப்பட்டினம் செல்வராஜ் ஆகிய மூவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை அரசின் நிவாரண நிதிக்கு கொடுப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா அறிவித்துள்ளார்.

 

corona virus Relief - Communist MPs gave one month salary!

 



ஏற்கனவே கம்யூனிஸ்ட் எம்பிகள் தங்களது சம்பளத்தை கட்சிக்கு கொடுத்து கட்சி கொடுக்கிற ஊதியத்தை மட்டுமே பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் அவர்கள் முழு சம்பளத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசின் நிவாரண நிதிக்கு கொடுத்து ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'கேரளாவின் மோசமான நிதி  நிர்வாகமே காரணம்' - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு 

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Central government alleges in Supreme Court on Kerala's poor financial management is the reason

மாநிலங்கள் வாங்கக் கூடிய கடன் தொகைக்கு மத்திய அரசு உச்சவரம்பு விதித்துள்ளதாக கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, ‘கடன் வாங்கும் வரம்புகளை மத்திய அரசு குறைப்பது என்பது மாநிலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும், நீண்ட கால பொருளாதாரத்தில் சேதத்தை ஏற்படுத்தும். இது குறுகிய காலத்திலோ அல்லது நடுத்தர காலத்திலோ கூட சரிசெய்ய முடியாததாக இருக்கும். கேரள மாநிலத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசுக்கு உடனடியாக சுமார் ரூ.26,000 கோடி தேவைப்படுகிறது. இந்த நிலையில், மாநில அரசு கடன் திரட்ட மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. 

அரசியலமைப்பு சட்டம், மாநிலங்களுக்கு நிதி சுயாட்சியை வழங்கியிருக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர், இத்தனை ஆண்டுகளாக மாநிலங்கள் தங்கள் பட்ஜெட்டை தயாரித்து நிர்வகிப்பதற்கு இந்த அதிகாரங்களைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கும், நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மாநிலத்தின் கடனை தீர்மானிப்பதற்கும் மாநிலங்களுக்கு உட்பட்டது. மேலும், தேவையான அளவிற்கு மாநிலம் கடன் வாங்காவிட்டால், குறிப்பிட்ட நிதியாண்டிற்கான மாநிலத் திட்டங்களை மாநிலத்தால் முடிக்க முடியாது.

Central government alleges in Supreme Court on Kerala's poor financial management is the reason

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகம், கேரளா மீது நிகரக் கடன் வாங்கும் உச்சவரம்பை விதித்துள்ளது. இதன் மூலம், பொது சந்தையில் கடன் திரட்டுவது உள்பட அனைத்து வழிகளில் இருந்தும் கடன் திரட்டுவதை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தனது நிதி விவகாரங்களை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு இருக்கின்ற அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது' என்று தெரிவிக்கப்பட்டது.  

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விசுவநாதன் அமர்வு முன் வந்தது. அப்போது, இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் (05-02-24) அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'கேரளா மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு அந்த அரசின் மோசமான நிதி நிர்வாகமே காரணம். இந்த நிலையில் தான், கேரளா அரசு சார்பில் கடன் வாங்கும் வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருக்கிறது. கேரளா அரசு, மாநில அரசின் உற்பத்தி திட்டங்கள், நலத்திட்டங்களுக்காக கடன் வாங்கவில்லை. மணிலா அரசு ஊழியர்களின் ஊதியம், பென்ஷன், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கு கடன் வாங்க முயற்சிக்கிறது.

இதனையடுத்து, கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், மத்திய அரசு, கேரளா ஆளுநர் கண்டித்து நாளை (08-02-24) டெல்லியில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயனின் இந்த போராட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மாஜி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மறைவு! 

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Former communist MLA S. Rajasekaran passed away

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜசேகரன் மறைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிறைந்திருந்த குளமங்கலம் வடக்கு கிராமத்தில் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ராஜசேகரன். கீரமங்கலத்தில் பள்ளியில் படிக்கும் போது கிராமங்கள் தோறும் நடக்கும் கம்யூனிஸ்ட் மக்கள் நலப் போராட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களைப் பார்த்து இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஜமீன் ஒழிப்பு போராட்டம், தொழிலாளர் நலப் போராட்டங்களில் பங்கேற்றவர். பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டார். அதேபோல படிப்படியாக கட்சிப் பதவிகளிலும் முன்னேறினார்.

2001ம் ஆண்டு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டாலும் அடுத்து 2006ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

2011ல் சட்டமன்ற உறுப்பினர் காலம் முடிந்த பிறகு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு புதுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று புதன் கிழமை உயிரிழந்தார்.