Skip to main content

முதல் மற்றும் இறுதி வணக்கம்!  அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க ஊழியர் பரபரப்பு கடிதம்

 

என் போன்ற அரசு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு முதல் மற்றும் இறுதி வணக்கம்! இது ஒரு எச்சரிக்கை பதிவு! என தலைப்பிட்டு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் ஊழியர் பிச்சைப்பிள்ளை என்பவர் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். 
 

அதில், 
 

"கரோனா" இது உலகையே ஆட்டி படைக்கும் கொடிய நோய். ஒரு மனிதனின் உடலிலிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவதோடு மட்டும் அல்லாமல் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு கைமாறும் எந்தவொரு பொருள்களிலும், காற்றின் மூலமாகவும் அதிவேகமாக பரவி வரும் கொடியநோய் தான் covid-9 என்கிற கரோனா! 
 

உலக நாடுகளையே அச்சுறுத்தும் இந்த நோய் மனிதர்களை தாக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

 நம் இந்தியாவில் இப்போது அதிவேகமாக பரவி வரும் சூழலில் நம் பாரதப்பிரதமர் துரிதமாக சிந்தித்து நோய் பரவும் நிலையை தடுக்க அமல் படுத்தியதுதான் இந்த முழுஊரடங்கு உத்தரவு. 
 

ஆனால் இதில் மாநில அரசுகளின் பங்கு என்ன?
 

 நான் இப்போது நம் நாட்டில் நடக்கபோகும் நிலையை கூறுகிறேன். ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வந்த நிலையில் திடீரென்று ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம், அது தான் அரசு அறிவித்த ரூபாய் ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் இலவசமாக அத்தியாவசிய பொருட்களை நியாயவிலைக்கடை பணியாளர்களின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்றடையுமாறு அறிவித்தது. 

 

ration card
இதில் பாரதப்பிரதமரின் ஊரடங்கு வருகிற ஏப்ரல் 14-ம் தேதியுடன் தமிழ்நாட்டில் முடிவடைந்துவிடும்.
 ஆம் தமிழ்நாட்டின் மக்கள் படையெடுப்பு நியாயவிலைக்கடையை நோக்கி இருக்கும். இலவசத்துக்காக ஒட்டு மொத்த மக்களும் நியாயவிலைக்கடையை முற்றுகையிடுவார்கள். இங்கே மக்களை மகிழ்ச்சி படுத்துவதாக நினைத்து ஒட்டு மொத்த மக்களையும் கரோனோவுக்கு பலியாக்கபோகிறது.
 

எத்தனை கட்டுப்பாடுகள் போட்டாலும் இலவசம் என்று அறிவித்தால் மக்களுக்கு கடிவாளம் போடமுடியாது என்று இந்த அரசுக்கு தெரியுதோ? இல்லையோ? ஆனால் நம் நியாயவிலைக்கடை பணியாளருக்கு நன்றாகவே தெரியும். இது அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அரசு சொல்வதை மட்டுமே கேட்கும்.
 

இன்றைய காலகட்டத்தில் நியாயவிலைக்கடைக்கு வேலைக்கும் வரும் விற்பனையாளர்கள் பட்டம் படித்தவர்கள். நம் நாட்டு சூழ்நிலையில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் இருந்தனர். அரசியல்வாதிகள் ஐந்து முதல் ஆறு லட்சங்கள் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு இன்று அதிகமாக நியாயவிலைக்கடையில் விற்பனையாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். 

அவர்களுக்கு தொகுப்பூதியம் ஒரு வருடத்திற்கு வெறும் ஐந்தாயிரம் மட்டுமே.
 பண்டிகை காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் அரசின் கவனம் நியாயவிலைக்கடையின் மீது இருக்கும். ஏனென்றால் இவர்கள் மூலமாகதான் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைகிறது. இந்த கடினமான வேலையை செய்யும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஐந்தாண்டுகளாக முப்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு ஒரு போதும் செவி சாய்க்கவில்லை. நீங்கள் செய்வது அரசுப்பணி ஆனால் முழுமையான அரசு ஊழியர் அல்ல என்று தமிழக அரசு கடந்த சட்டசபையில் தெரிவித்திருப்பது எங்கள் மத்தியில் அதிருப்தியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது.


எப்போது நிறைவேறும் எங்கள் முப்பது அம்சகோரிக்கைகள்?


 அதிகாரிகள் எடுத்த முன்னெச்சரிக்கை என்ன? இதோ

 நியாயவிலைக்கடைக்கு வரும் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டம் கட்டி நிற்கவேண்டுமாம். 

அதற்கு முன்னதாக டோக்கன் முறையை அமல்படுத்தவேண்டும் எவ்வாறு அமல்படுத்துவது டோக்கனை வீடு வீடாக கொண்டு தர நாங்கள் தயார். மக்கள் வாங்க தயாரா இருப்பார்களா? என்று சிந்திக்கவில்லை அதிகாரிகள். 

அடுத்து மக்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே நியாயவிலைக்கடைகளில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நான்கு இன்ச் பைப் குழாய்களில் விற்பனையாளர் பொருட்களை போடவேண்டும். ஏற்கனவே அதிகாரிகள் இதில் பொருட்கள் போட்டு ஆய்வு செய்தார்களா என்றால் இல்லை. இதில்  பத்து கிலோ அரிசியை தூக்கி அந்த குழாயில் கொட்டுவது எவ்வளவு சிரமம் உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும். இவர்களால் பத்து இன்ச் அளவு பைப்குழாய்கூட வாங்கி தரவில்லை என்பதே வேதனையான விஷயம். 

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு கொடுக்கும் பொருட்களில் பரவும் கொடிய நோய் குடும்பஅட்டைகள் வழியாக விற்பனையாளருக்கும் மக்களுக்கும் மாறி மாறி நோய்தொற்று பரவும் என்று தெரிந்தும் தெரியாமல் இருப்பது இந்த அரசும் அதிகாரிகளும் தான் என்பதை நாங்கள் மறக்கமாட்டோம்.

எனவே தமிழக அரசே இலவசங்களை அள்ளிதருவதற்கு இது ஏற்ற காலம் அல்ல. எத்தனையோ இலவச திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு வெற்றிகரமாக கொண்டு சேர்த்த நாங்கள் ஏற்கனவே ஊதிய பற்றாக்குறையால் பட்டினிச்சாவு அடைந்து வருகிறோம். பேருந்து வசதி இல்லாத இந்த நேரத்தில் எத்தனையோ பெண் விற்பனையாளர்கள் முப்பது, நாற்பது கிலோ மீட்டர் வந்து போகும் இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்காத அதிகாரிகளும், அரசும் எங்களுக்கு  இதுநாள் வரை என்ன செய்தது?


 

அரசே நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாரா?

 நியாயவிலைக்கடை ஊழியர்கள் பணிசெய்து முடித்தவுடன் அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் தனிமைப்படுத்தபட வேண்டும். இல்லையென்றால் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று முழு மருத்துவ பரிசோதனையை  தினமும் செய்ய அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏனென்றால் எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது.

விற்பனையாளருக்கு மரணம் ஏற்பட்டால் மூன்று லட்சம் அரசு இழப்பீடு தருகிறது. அதை இந்த பேரிடர் காலத்தில் வேலை செய்யும் மருத்துவ பணியாளருக்கு இணையாக எங்களுக்கும் ஐம்பது லட்சமாக உயர்த்தி தர வேண்டும்.

 தொலைதூரத்தில் இருந்து வரும் விற்பனையாளருக்கு குறிப்பாக பெண் விற்பனையாளருக்கும் வாகன வசதியும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி தரவேண்டும் .

பேரிடர் காலங்களிலும் பண்டிகை காலங்களிலும் ஏற்படும் கூடுதல் பணிசுமையில் வேலை செய்யும் விற்பனையாளருக்கு இரட்டிப்பு ஊதியம் உடனே அரசு அறிவித்தட வேண்டும்.

மேலும் நம்நாட்டில் நோயின் தாக்கம் குறைவாக உள்ள காரணத்தினால் மக்களிடையே அலட்சியம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் கரோனாவினால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படும் வரை அரசு இந்த இலவச திட்டங்களை மறுபரிசீலனை செய்து காலம் தாழ்த்தி  செயல்படுத்தவேண்டுமாறு ஒட்டு மொத்த விற்பனையாளர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இதை அனைத்து விற்பனையாளர்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏப்ரல் 14 வரை அனைத்து நியாயவிலைக்கடைகளும் இயங்காமல் இருக்கவும் மக்களின் நலனுக்காக நல்ல முடிவை அரசு எடுக்க ஆவணம் செய்ய வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 

குறைந்த கூட்டம், அதும் ஆண்கள் மட்டுமே வந்துபோகும் மதுகடையை மூடியது போல் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்பெண் இருபாலாரும் வந்து போகும் நியாயவிலைக்கடையை அரசு திறக்கசொல்வது எந்த விதத்தில் நாயம்.
இந்த கடினமான சூழலில் இச்செய்தியை கடைக்கோடி மக்களுக்கு சென்றடையவேண்டுமாய் ஒவ்வொரு விற்பனையாளரையும் கேட்டுக் கொள்கிறேன்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்