
தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத், புதுச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் நாளுக்கு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
அந்த வகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புள்ள மாவட்டங்கள்/ மாநகரப் பகுதிகளில் தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்தக் குழு வழிவகுக்கும். வணிக வளாகங்கள், திரையரங்குகளில் விதிகளை மீறினால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும். ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யும். காய்ச்சல் முகாம்கள், நடமாடும் ஆர்டி- பிசிஆர் மாதிரி சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்படும். பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் அவற்றை மார்ச் 31- ஆம் தேதிக்குள் நடத்திமுடிக்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தினமும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கரோனா நிலையைச் சமாளிக்கவும், நோய்த் தொற்றைத் தடுக்கவும் இக்குழு செயல்படும். பேருந்துகள், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அலுவலகம், தொழிற்சாலைகளில் பணிபுரிவோரைத் தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்க வேண்டும். உள்ளரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழக அரசின் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசின் விதிகளை மீறினால் ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.