coronavirus ward

Advertisment

வேலூர் மாவட்டம், பொன்னாத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்தவர் அந்தச் சிறு வியாபாரி. 40 வயதான அவர் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சி.எம்.சி. மருத்துவமனையில் இறந்துவிட்டார். இறந்தவர் உடலை ஒப்படைக்க 3.5 லட்சம் பணம் பெற்றுக்கொண்ட பின்பே உடலை ஒப்படைத்துள்ளது.

அவர் இறந்துவிட்டார் என்றதும், அவரது குடும்பத்தில் உள்ள அவரது மனைவி, 11 வயதான ஒரு மகன், 8 வயதான ஒரு குழந்தை, இறந்தவரின் அம்மா போன்றவர்களைச் சுகாதாரத்துறையினர் அழைத்துவந்து வேலூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா நோயாளியாக அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளனர். இந்நிலையில் அவர் தனது சகோதரிக்கு போன் செய்து அழுதுள்ளார்.

நம் கவனத்துக்கு அந்தத் தகவல் வர அவரிடம் பேசினோம். இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வச்சியிருந்தப்ப எங்களை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க அங்கியிருந்த மருத்துவர்களும், நர்ஸ்களும். இங்க அடுக்கம்பாறை வந்தபிறகு எங்களை டாக்டர், நர்ஸ் யாரும் வந்து பார்க்கல. 3 வேளை சாப்பாடு மட்டும் நேரத்துக்கு வருது, மத்தப்படி மருந்து, மாத்திரை எதுவும் தர்றதில்லை.

Advertisment

என்னோட மாமியார்க்கு பி.பி. இருக்கு. அதுக்கான மாத்திரையை எடுத்துவராம விட்டுட்டாங்க. நாங்க இங்க வந்ததுலயிருந்து 3 முறை அவுங்களுக்கு மாத்திரை தாங்கன்னு கேட்டுட்டன், தரவேயில்லை. அவுங்களாள முடியலன்னு மாடியிலயிருந்து கீழ இறங்கிவந்து நர்ஸ்கள்கிட்ட மாத்திரை கேட்டால், எதுக்கு கீழ இறங்கி வந்தன்னு சண்டை போடறாங்க என அழுதார்.

ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோயாளிகள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள், வயதானவர்களை கரோனா பலி வாங்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியிருக்க வயதான ஒரு பெண்மணி, ரத்த அழுத்தம் உள்ள ஒருவருக்குக் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா சிகிச்சை தான் அளிக்கவில்லை. ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சை கூட அளிக்காமல் இருப்பது எந்த விதத்தில் சரி.

இதுபற்றி நாம் மருத்துவமனை ஆர்.எம்.ஓ. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது யாரும் போனை எடுக்கவில்லை. கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை எதனால் அதிகரிக்கிறது என்பது இப்போது புரிகிறது.