ADVERTISEMENT

கரோனா பாதிப்பைப் பயன்படுத்தி அரசியல் பிரமுகர்கள் வசூல் வேட்டை: நிறுத்திக் கொள்ளுமாறு ஈஸ்வரன் எச்சரிக்கை!

01:34 PM May 09, 2020 | rajavel

ADVERTISEMENT



கரோனா பாதிப்பை பயன்படுத்தி வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் அரசியல் பிரமுகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று எச்சரிக்கிறோம் எனக் கூறியிருக்கிறார் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அடைபட்டிருக்கிற மக்களுக்கு உதவுகிறோம் என்பதைக் காரணம் காட்டி பணம் வசூலில் பல அரசியல் பிரமுகர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். சிறு, குறு தொழிற்சாலை நடத்துபவர்களையும், வியாபாரிகளையும் வற்புறுத்தி மிரட்டிப் பணம் கேட்பது பல இடங்களில் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

நாற்பத்தைந்து நாட்களாக எந்த வியாபாரமும் நடக்காமல் வேதனையில் இருந்தவர்கள் இப்போது தான் துவங்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்களை மிரட்டி நன்கொடை என்ற பெயரில் பணம் கேட்பது அராஜகத்தின் உச்சகட்டம். மக்களுக்கு உதவி என்றால் அதைத் தொழில் துறையினரும், வியாபாரிகளும் நேரடியாகச் செய்து கொள்வார்கள். அவர்களிடம் மிரட்டிப்பிடுங்க நீங்கள் யார்.

செத்த பிணத்தில் கூட பிடுங்கியது லாபம் என்ற கொள்கையில் இருப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். மதுக்கடைகளைத் திறந்தால் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தொழிலில் இருப்பவர்களும், வியாபாரிகளும் தங்களுடைய பாதுகாப்பு கருதி புகார் கொடுக்க பயப்படுகிறார்கள். மிரட்டிப் பணம் வசூலிப்பதைப் பற்றி புகார் கொடுக்க பிரத்யேக வலைத்தள வசதிகள் வேண்டும். அது உயர் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்.

புகார் கொடுப்பவர்களுக்குரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கட்சி வித்தியாசமின்றி யார் தவறு செய்தாலும் நடவடிக்கை பாய வேண்டும். ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரிகள் போல் ஒரு சிலரும், அடிமைகள் போல பலரும் வாழ்ந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. அரசு தாமதமில்லாமல் தவறு செய்பவர்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT